பா.ஜ.,வில் 'சீட்' கிடைக்காத விரக்தி: அ.தி.மு.க.,வில் மீண்டும் மைத்ரேயன்
பா.ஜ.,வில் 'சீட்' கிடைக்காத விரக்தி: அ.தி.மு.க.,வில் மீண்டும் மைத்ரேயன்
ADDED : செப் 13, 2024 04:58 AM

சென்னை : முன்னாள் எம்.பி., மைத்ரேயன், பா.ஜ.,விலிருந்து விலகி, நேற்று அ.தி.மு.க.,வில் இணைந்தார்.
பா.ஜ.,வில் பல்வேறு பொறுப்புகளை வகித்த மைத்ரேயன், கடந்த 2000ம் ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகி, அ.தி.மு.க.,வில் இணைந்தார்; ராஜ்யசபா எம்.பி.,யானார். பல ஆண்டுகளுக்கு தொடர்ந்து எம்.பி., பதவி வகித்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.க.,வில் பிளவு ஏற்பட்டபோது, பன்னீர்செல்வம் அணியில் இருந்தார். பின்னர், பழனிசாமி பக்கம் சென்றார். அதன்பின், அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, பா.ஜ.,வுக்கு சென்றார். அக்கட்சி தேசிய செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
கடந்த லோக்சபா தேர்தலின்போது, தென்சென்னை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டார். வாய்ப்பு அளிக்கப்படும் என கட்சி மேலிடம் உறுதி அளித்திருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் கவர்னர் பதவியில் இருந்து விலகி மீண்டும் அரசியலுக்கு வந்த தமிழிசைக்கு போட்டியிட வாய்ப்பளித்தனர்.
இதனால் மைத்ரேயன், பா.ஜ., தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்தார். லோக்சபா தேர்தல் பிரசாரம் செய்யாமலும் ஒதுங்கி இருந்தார்.
இந்நிலையில் நேற்று அவர், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, சென்னையில் சந்தித்தார். பின், தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார்.

