பழைய சட்ட கல்லுாரி வளாகத்தில் ஐந்து மாடி கட்டடம்: ஐகோர்ட் அனுமதி
பழைய சட்ட கல்லுாரி வளாகத்தில் ஐந்து மாடி கட்டடம்: ஐகோர்ட் அனுமதி
ADDED : மே 22, 2024 06:03 AM

சென்னை : சென்னை பாரிமுனையில் உள்ள பழைய சட்ட கல்லுாரி வளாகத்தில், கிரிமினல், சிவில் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்ற அறைகள், நீதிபதிகள் அறைகள் உள்ளிட்டவை அடங்கிய ஐந்து மாடி கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா, உயர் நீதிமன்ற கலையரங்கில் இன்று நடக்கிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் டி.மோகன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி அடங்கிய அமர்வில், நேற்று அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
சட்ட கல்லுாரி வளாகத்தில் இருந்த இரு சமாதிகளை, அப்புறப்படுத்த வேண்டும் என்ற, தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குடன், இந்த வழக்கையும் சேர்த்து, பதிவுத்துறை பட்டியலிட வேண்டும்.
நகர் ஊரமைப்பு துறை சட்ட விதிகளுக்கு உட்பட்டும், பாரம்பரியமிக்க உயர் நீதிமன்ற வளாகத்தை பாதுகாப்பதன் அவசியத்தை உணர்ந்தும் செயல்படுவர் என, இந்த நீதிமன்றம் நம்புகிறது. திட்டமிட்டபடி இன்று அடிக்கல் நாட்டு விழா நடத்தலாம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முன்னதாக, 'அடிக்கல் நாட்டு விழாவை, ஹிந்து மத முறைப்படி மட்டுமல்லாமல், அனைத்து மத முறைப்படியும் நடத்த உத்தரவிட வேண்டும்' என, திராவிடர் கழகம் சார்பில், மூத்த வழக்கறிஞர் முரளி சேகர் ஆஜராகி முறையீடு செய்தார். அதற்கு, 'இது ஒரு மத நிகழ்வு என, எப்படி அனுமானிக்க முடியும்?' என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அது தொடர்பான மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்தனர்.

