UPDATED : ஜூலை 16, 2024 08:38 AM
ADDED : ஜூலை 16, 2024 02:08 AM

தஞ்சாவூர்: தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டியக்க மாநில துணை தலைவர் சுகுமாறன் தலைமையிலான விவசாயிகள், கோரிக்கைகளை முன்வைத்து கலெக்டர் அலுவலக வாசலில் படுத்து, நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் போலீசார் பேச்சு நடத்தினர். அரைமணி நேர போராட்டத்திற்கு பின், டி.ஆர்.ஓ., தியாகராஜனிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.
2,000 டன் விதைகள்
சுகுமாறன் கூறியதாவது:
தமிழக அரசு, 78.67 கோடி ரூபாய் மதிப்பில், குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவித்தது.
பம்புசெட்டால், 50 சதவீதம் விவசாயிகள் முன்பட்ட குறுவை சாகுபடியை துவங்கி, பயிர்கள் வளர்ச்சியடைந்த நிலையில் உள்ளன. தற்போது, சில விவசாயிகள் விதை விட்டு சாகுபடியை துவங்கியுள்ளனர்.
குறுவை தொகுப்பு திட்டத்தில், ஒரு லட்சம் ஏக்கருக்கு, 2,000 டன் நெல் விதைகள், 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படும் என்ற நிலையில், இனிமேல் நெல் விதை கொடுப்பதால் எந்த பயனும் இல்லை.
இயந்திர நடவுக்கு பின்னேற்பு மானியமாக ஏக்கருக்கு, 4,000 ரூபாய் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதிலும், சிறு, குறு விவசாயிகள், 3 ஏக்கர் நடவு செய்தாலும், ஒரு ஏக்கருக்கு மட்டுமே நடவு மானியம் வழங்கப்படும் என்பது ஏமாற்று வேலை. இதில், ஆட்களால் நடவு செய்த விவசாயிகளுக்கு மானியம் கிடையாது என்பதும் ஏற்புடையதல்ல.
நுண்ணுாட்ட கலவை, உரங்களுக்கான நிதி போன்றவை தொகுப்பில் வழங்கப்படுவதால், தேவைப்படாத விவசாயிகளுக்கு சென்றடைகிறது. இதில், யாருக்கும் முன்னுரிமை கொடுக்கவில்லை.
முரண்பாடுகள்
மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லை என்ற நிலையில், ஆற்று பாசன விவசாயிகள் குறுவை தொகுப்பு திட்டத்தில் பயன் பெறமாட்டர்.
இதில், பம்பு செட் விவசாயிகள் பலர் இயந்திர நடவு முறை இல்லாமல், ஆட்களால் நடவு செய்கின்றனர். இதிலும், நடவு மானியம் உள்ளிட்டவற்றில் ஆளும் கட்சி செல்வாக்கு உள்ளவர்களே அதிகளவில் பயன் பெறுவர்.
அரசு, குறுவை தொகுப்பு திட்டத்தில், தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவுகளால், பல்வேறு முரண்பாடுகள் உள்ளன.
இதில், விவசாயிகளுக்கு எந்தப் பலனும் இல்லை. குறுவை சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் பயன் பெறும் விதமாக இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

