கரூரில் பொய் வழக்கு போடுவது அதிகமாக உள்ளது: பழனிசாமி
கரூரில் பொய் வழக்கு போடுவது அதிகமாக உள்ளது: பழனிசாமி
ADDED : ஏப் 04, 2024 06:44 AM

கரூர் : ''தமிழகம் முழுதும், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள், ஐ.டி., விங்க் நிர்வாகிகள் மீது, தி.மு.க., அரசு பொய் வழக்கு போடுகிறது. குறிப்பாக, கரூர் மாவட்டத்தில் பொய் வழக்கு போடுவது அதிகமாக உள்ளது. அதை சட்டரீதியாக சந்திப்போம்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., பேசினார்.
கரூர் லோக்சபா தொகுதி பிரசார பொதுக்கூட்டம், மாவட்ட அ.தி.மு.க., செயலர் விஜயபாஸ்கர் தலைமையில், தோரணகல்பட்டியில் நேற்று நடந்தது. கரூர் வேட்பாளர் தங்கவேலை ஆதரித்து, கட்சியின் பொதுச்செயலர் இ.பி.எஸ்., பேசியதாவது:
அ.தி.மு.க., ஆட்சியின் போதுதான், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கரூர் மாவட்டத்தை உருவாக்கினார்.
தி.மு.க., ஆட்சியில், 36 அமாவாசை வீணாகி போய் விட்டது. இன்னும், 24 அமாவாசை போன பிறகு வரும், அ.தி.மு.க., ஆட்சியில் ஒளிமயமான எதிர்காலம் பிறக்கும். தி.மு.க., ஆட்சியில், தமிழகத்தில் ஊழல் இல்லாத துறையே இல்லை.
தமிழகம் முழுதும், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள், ஐ.டி., விங்க் நிர்வாகிகள் மீது, தி.மு.க., அரசு பொய் வழக்கு போடுகிறது. குறிப்பாக, கரூர் மாவட்டத்தில் பொய் வழக்கு போடுவது அதிகமாக உள்ளது. அதை சட்டரீதியாக சந்திப்போம்.
நான் முதல்வராக இருந்த போது, நினைத்திருந்தால் தி.மு.க.,வினர் அனைவரும் பாதுகாப்பாக சிறையில் இருந்து இருப்பர். ஆனால், நாங்கள் அதை செய்யாமல், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தினோம்.
ஊழல் செய்ததால்தான், செந்தில் பாலாஜியை செயல் வீரர் என்கிறார் முதல்வர் ஸ்டாலின். செந்தில் பாலாஜி இருக்க வேண்டிய இடத்தில்தான் இருக்கிறார்.
தி.மு.க., அயலக அணி பொறுப்பில் இருந்த ஜாபர் சாதிக், போதைப்பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டுள்ளார். 2,000 கோடி ரூபாய் அளவுக்கு கடந்த, மூன்றாண்டுகளில் போதைப்பொருட்கள் கடத்தப்பட்டதாக செய்திகள் வருகின்றன.
வரும் லோக்சபா தேர்தல் வெற்றி என்பது வரும், 2026ல் நடக்கும் சட்டசபை தேர்தலுக்கு அச்சாணியாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னாள் அமைச்சர்கள் சீனிவாசன், தங்கமணி, விஜயபாஸ்கர், சின்னசாமி, முன்னாள் எம்.பி., குமார், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பரமசிவம், சந்திரசேகர், கூட்டணி கட்சி நிர்வாகிகள் அரவை முத்து, முகமது அலி ஜின்னா உட்பட பலர் பங்கேற்றனர்.

