தானியங்கி முறையில் கட்டட அனுமதி கடும் விதியால் இன்ஜி.,க்கள் அச்சம்
தானியங்கி முறையில் கட்டட அனுமதி கடும் விதியால் இன்ஜி.,க்கள் அச்சம்
ADDED : ஏப் 09, 2024 02:18 AM
சென்னை : விதிமீறல் தொடர்பான கடுமையான கட்டுப்பாடுகளால், தானியங்கி முறையில் கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் பணியில் பங்கேற்க பொறியாளர்கள் அச்சமடைந்துஉள்ளனர்.
தமிழகத்தில், சிறிய அளவிலான குடியிருப்பு கட்டும் பணிகளுக்கு, உள்ளாட்சி அமைப்புகளில் ஒப்புதல் பெற வேண்டும். இவ்வாறு ஒப்புதல் பெற விண்ணப்பித்தால், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் தலையீட்டால், கட்டுமான அனுமதி தாமதமாகிறது.
வங்கியில் கடன் வாங்கி பணிகளை துவங்க திட்டமிட்டவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனால், பலர் விதிகளுக்கு புறம்பாக, முறையான அனுமதி இன்றி வீடு கட்டும் பணிகளில் ஈடுபடுகின்றனர்.
இதற்கு தீர்வாக, 2,500 சதுரடி வரையிலான முறையாக அங்கீகரிக்கப்பட்ட மனையில், 1,200 சதுரடி வரையிலான வீடு கட்டுவோருக்கு, 2019ல் சலுகை வழங்கப்பட்டது. இதன்படி, கட்டுமான திட்ட அனுமதி கோரி விண்ணப்பித்தால் போதும், 30 நாட்களுக்கு பின் உரிமையாளர்கள் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம்.
இதற்கான அரசாணை, 2019ல் வெளியிடப்பட்டது. இதில், தானியங்கி முறையிலான இந்த அனுமதியை பயன்படுத்தி வீடு கட்டும்போது, விதிமீறல் இருப்பது தெரியவந்தால், அதில் சம்பந்தப்பட்ட பொறியாளர்களின் பதிவு உரிமம் ரத்து செய்யப்படும் என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இதனால், பொறியாளர்கள் இதில் ஆர்வம் காட்டாமல் இருந்தனர்.
இந்நிலையில், 3,500 சதுரடி வரையிலான அங்கீகரிக்கப்பட்ட மனையில், 2,500 சதுரடி வரையிலான வீடு கட்டுவோர், சுய சான்று முறையில் விண்ணப்பத்தை தாக்கல் செய்துவிட்டு வீடு கட்டலாம் என, அரசு தற்போது அறிவித்துள்ளது.
விதிமீறலை
அனுமதிக்க கூடாது
தமிழக அரசு ஏற்கனவே அறிவித்த தானியங்கி முறையிலான கட்டட அனுமதி திட்டம் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. கடந்த, 2019ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையும் அமலுக்கு வரவில்லை. இந்த அரசாணையில், உரிமம் ரத்து என்ற நிபந்தனை, பொறியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கட்டுமான பணியில் விதிமீறலை எந்த விதத்திலும் அனுமதிக்க கூடாது. அதே நேரம், இதற்கான நிபந்தனைகள் குறித்து பொறியாளர்கள், வீட்டு உரிமையாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அப்போது தான், அரசின் இந்த நடவடிக்கையின் முழுமையான பயன் மக்களுக்கு கிடைக்கும்.
- எஸ்.ராமபிரபு,
தென்னக மைய நிர்வாகி,
இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கம்.

