sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரசை நம்ப வேண்டாம்: மோடி

/

கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரசை நம்ப வேண்டாம்: மோடி

கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரசை நம்ப வேண்டாம்: மோடி

கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரசை நம்ப வேண்டாம்: மோடி


UPDATED : மே 04, 2024 04:00 PM

ADDED : ஏப் 01, 2024 02:36 AM

Google News

UPDATED : மே 04, 2024 04:00 PM ADDED : ஏப் 01, 2024 02:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்த காங்கிரஸ் கட்சியை, மக்கள் ஒருபோதும் நம்பக்கூடாது என்பது மீண்டும் நிரூபணமாகி உள்ளது. நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பலவீனப்படுத்துவதையே, 75 ஆண்டுகளாக காங்கிரஸ் செய்து வந்துள்ளது' என, பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

கச்சத்தீவு மீதான உரிமை இலங்கைக்கு வழங்கப்பட்டது தொடர்பாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட விபரங்களை, 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழ் நேற்று வெளியிட்டது.

அதில், இந்தியா வசமிருந்த 1.9 சதுர கி.மீ., பரப்பளவு உடைய கச்சத்தீவு, மறைந்த பிரதமர் இந்திரா ஆட்சியின் போது, 1974ல் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட விபரம் இடம் பெற்றுள்ளது. மேலும், நேரு பிரதமராக பதவி வகித்த போது, கச்சத்தீவு விவகாரம் பார்லிமென்டில் விவாதத்துக்கு வந்த போது, அந்த குட்டித் தீவை இலங்கை வசம் ஒப்படைப்பதில் தனக்கு எவ்வித தயக்கமும் இல்லை என்று கூறிய தகவலும் இடம் பெற்று உள்ளது.

இதை, தன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'இந்தியாவின் நலனை புறந்தள்ளிவிட்டு, இலங்கையின் நலனுக்காக கச்சத்தீவை காங்கிரஸ் அரசு தாரை வார்த்துள்ளது. 'அப்போது, தமிழகத்தில் ஆட்சியில் இருந்த தி.மு.க.,வும் இதை தட்டிக் கேட்கவில்லை. இதன் காரணமாகத் தான், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் இன்றைக்கு பாதிக்கப்பட்டுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.

நாளிதழில் வெளியான செய்தியை, தன் சமூக வலைதளத்தில் பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:துளியும் தயக்கமின்றி கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்த காங்.,கின் செயல் குறித்து தற்போது வெளியாகி இருக்கும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. இதை கண்டு ஒவ்வொரு இந்தியரும் கோபத்தில் கொந்தளிக்கின்றனர். காங்கிரஸ் கட்சியை எப்போதும் நம்ப முடியாது என்பது, மக்கள் மனதில் மீண்டும் நிரூபணமாகி உள்ளது. நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பலவீனப்படுத்துவதையே, 75 ஆண்டு காலமாக காங்கிரஸ் செய்து வருகிறது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் நேற்று நடந்த பா.ஜ., பிரசார கூட்டத்திலும் பிரதமர் மோடி, கச்சத்தீவு குறித்து பேசினார்.

அவர் பேசியதாவது:நாட்டின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் பங்கம் விளைவிக்க காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் முயன்று வருகின்றன. காங்கிரசின் மற்றொரு தேச விரோதச் செயல் இன்று அம்பலமாகியுள்ளது. நம் எல்லை பகுதியில் தமிழகத்தின் கடற்பகுதியை ஒட்டி அமைந்துள்ள கச்சத்தீவு, தேசிய பாதுகாப்பின் கண்ணோட்டத்தில் மிகவும் முக்கியமானது.

நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த இந்த தீவை, தேவையற்றது, இங்கு எதுவும் நடக்காது எனக் கூறி அந்த தீவை இலங்கைக்கு காங்கிரஸ் அரசு பல ஆண்டுகளுக்கு முன் தாரை வார்த்தது. காங்கிரசின் இந்த நடத்தைக்கு நாடு தொடர்ந்து விலை கொடுத்து வருகிறது. தற்செயலாக கச்சத் தீவை நோக்கிச் செல்லும் இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர். தான் செய்த பெரிய தவறு குறித்து காங்கிரஸ் இன்றும் மவுனம் சாதிக்கிறது. இந்த விவகாரத்தில் தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளும் மவுனம் சாதிக்கின்றன. இவர்கள் இருக்கும் இண்டியா கூட்டணி தேசத்தின் நலனுக்காக நல்ல முடிவுகளை எடுக்க முடியுமா?இவ்வாறு அவர் பேசினார்.

லோக்சபா தேர்தல் நேரத்தில், கச்சத்தீவு விவகாரம் பொதுமக்கள் மத்தியில் விவாதப் பொருளாகி உள்ளது. பா.ஜ., செய்தி தொடர்பாளர் சுதன்ஷு திரிவேதி கூறியதாவது: முந்தைய காங்., அரசு எடுத்த அலட்சியமான முடிவால், தமிழக மீனவர்கள் தங்கள் பகுதியில் இருந்து 25 கி.மீ., தொலைவில் உள்ள பகுதிக்கு சென்று மீன் பிடிக்கையில், கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்படுகின்றனர்.இது குறித்து காங்., அல்லது தி.மு.க., கேள்வி எழுப்புவதில்லை. மாறாக, நாட்டு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாக வைத்து செயல்படும் மோடி கேள்வி கேட்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

தீவு கைமாறிய கதை!

தமிழகத்தின் ராமேஸ்வரம் கடலில் இருந்து வடமேற்கில், 55 கி.மீ., தொலைவில் பாக் ஜலசந்தியில் அமைந்துள்ள கச்சத்தீவு, 14ம் நுாற்றாண்டில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பால் உருவானதாக கருதப்படுகிறது. இந்த 285 ஏக்கர் நிலப்பரப்பு உடைய குட்டித்தீவு, ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்தியா மற்றும் இலங்கையின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வந்தது. பின், 17ம் நுாற்றாண்டில், ராமநாதபுரம் மன்னரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. 1948 வரை இதை ராமநாதபுரம் மன்னர் குடும்பம் நிர்வகித்து வந்தது. நாடு சுதந்திரம் பெற்ற பின் ஜமீன்தார் நிர்வாக முறை ஒழிக்கப்பட்ட போது, இந்த தீவு மதராஸ் மாகாண கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. சுதந்திரத்திற்கு பின், கச்சத்தீவு பகுதியில் நம் கடற்படையினர் பயிற்சியில் ஈடுபட, இலங்கை எதிர்ப்பு தெரிவித்து வந்தது. அவர்களின் அனுமதியின்றி அந்த பகுதியில் பயிற்சி மேற்கொள்ளக் கூடாது என்றும் வலியுறுத்தியது.இந்த விவகாரம் பார்லிமென்டில் விவாதப் பொருளானது. சிறிய தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுப்பதில் தனக்கு தயக்கம் எதுவும் இல்லை என, அப்போதைய பிரதமர் நேரு பார்லிமென்டில் தெரிவித்தார். பல ஆண்டுகளாக இழுபறியாக நீடித்து வந்த இந்த பிரச்னை, இந்திரா பிரதமராக இருந்த போது முடிவுக்கு வந்தது. இரு நாட்டு வெளியுறவுத்துறை செயலர்கள், 1973ல் கொழும்பில் சந்தித்து பேசினர். அதற்கு அடுத்த ஆண்டு, கச்சத்தீவை இலங்கை வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த தகவல், அப்போதைய வெளியுறவுத்துறை செயலர் கேவல் சிங் வாயிலாக, அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தெரிவிக்கப்பட்டது.



'தி.மு.க.,வின் சாயம் வெளுத்து விட்டது!'

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக கச்சத்தீவை, இலங்கைக்கு இந்தியா 1976ம் ஆண்டு தாரை வார்த்தது தெரியவந்துள்ளது. இதைப்பற்றிய முழு விபரம் 1974ம் ஆண்டு ஜூன் மாதமே, அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று வரை கச்சத்தீவு பற்றி உண்மைக்கு புறம்பாக பிரசாரம் மேற்கொள்ளும் தி.மு.க., அரசு, இதற்கு பதிலளிக்க வேண்டும். கச்சத்தீவை, காங்கிரசுடன் சேர்ந்து தாரை வார்த்துவிட்டு, தி.மு.க.,வினர் பிறரை கேள்வி கேட்கும் போக்கு மிகவும் தவறானது. 50 ஆண்டுகளாக தி.மு.க.,வினர் செய்து வரும் உண்மைக்கு புறம்பான பிரசாரத்தின் சாயம், இதன் வாயிலாக வெளுத்துள்ளது.நம் நாட்டின் ஒரு பகுதியை தாரை வார்த்த அதே கூட்டம், இன்று இண்டியா கூட்டணியின் வாயிலாக வடக்கு, தெற்கு என பிரிவினைவாதம் பேசுகிறது. எனவே, கச்சத்தீவு விவகாரத்தில் தி.மு.க., தன் உண்மைக்கு புறம்பான பிரசாரத்தை நிறுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.



'நட்பின் அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டது'

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:பிரதமர் மோடி தன் 10 ஆண்டு ஆட்சியில், 10வது ஆண்டில் திடீரென விழித்துக் கொண்டு பிராந்திய ஒருமைப்பாடு, தேசிய பாதுகாப்பு குறித்து பேசுகிறார். இதற்கு தேர்தல் தான் காரணம் என்பதும், உங்கள் பதற்றமும் தெளிவாக தெரிகிறது.'இந்தியா - வங்கதேசம் இடையிலான நில எல்லை ஒப்பந்தம் நிலத்தின் மறுசீரமைப்பு மட்டுமல்ல; இதயங்களின் சந்திப்பு' என, 2015ல் பிரதமர் பேசியதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.இதே போன்ற நட்பின் அடிப்படையில் தான், 1974ல் கச்சத்தீவு இலங்கை வசம் ஒப்படைக்கப்பட்டது. லோக்சபா தேர்தலை மனதில் வைத்தே பிரதமர் மோடி, இன்றைக்கு இப்படி பேசுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.



ஒருமைப்பாட்டுக்கு எதிரான காங்.,

கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரசுக்கு என் கண்டனத்தை தெரிவிக்கிறேன். அவர்கள் தாங்களாக முன் வந்து கச்சத்தீவை விட்டுக் கொடுத்துள்ளனர். அதைப் பற்றிய எந்த வருத்தமும் காங்கிரசுக்கு தற்போது வரை இல்லை. இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் எதிரானவர்கள் காங்கிரஸ் கட்சியினர் என்பதையே இது காட்டுகிறது. அவர்கள் நம் தேசத்தை உடைக்க விரும்புகின்றனர். --- அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,



அதிர்ச்சியூட்டும் செயல்!

கச்சத்தீவை தாரை வார்த்தது அதிர்ச்சியூட்டும் செயல். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்திய பகுதியை மற்ற நாடுகளுக்கு விட்டுக் கொடுப்பது காங்கிரஸ் கலாசாரத்தின் ஒரு பகுதி. கச்சத்தீவு கொடுக்கப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் அரசு வேண்டுமென்றே அலட்சியப் போக்குடன் செயல்பட்டு இருப்பதை, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கிடைத்த பதில் தெளிவுபடுத்தி உள்ளது. - நட்டா தேசிய தலைவர், பா.ஜ.,



ராகுல் குடும்பம் 'டீல் பிக்சிங்'

ராகுல் போன்றவர்கள் மேட்ச் பிக்சிங் குறித்து பேசுகின்றனர். கடந்த 1974ம் ஆண்டு, பிரதமர் இந்திரா தலைமையிலான மத்திய அரசு, தேசிய நலன் மற்றும் தமிழக மக்களின் எண்ணத்தை கருத்தில் கொள்ளாமல், கச்சத்தீவை, நம் அண்டை நாடான இலங்கைக்கு தாரை வார்த்தது; இது, காங்கிரசின் அதிகார குடும்பத்தின் ஆதாயத்திற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை. எனவே, ராகுலின் குடும்பத்தார் மேற்கொண்டது டீல் பிக்சிங். -ஷெஷாத் பூனவாலா, செய்தி தொடர்பாளர், பா.ஜ.,



பச்சைக்கொடி காட்டிய தி.மு.க.,: ஜெயகுமார் குற்றச்சாட்டு

''கச்சத்தீவை இலங்கைக்கு, காங்கிரஸ் தாரைவார்த்த போது, அதற்கு பச்சைக்கொடி காட்டிய தி.மு.க., மத்தியில் ஆட்சியில் பங்கு வகித்த போதும், கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் குற்றம் சாட்டினார். அவர் அளித்த பேட்டி:மத்தியில், 1974ம் ஆண்டு காங்கிரஸ் அரசு இருந்தது. தமிழகத்தில் கருணாநிதி முதல்வராக இருந்தார். அப்போது, இலங்கை பிரதமராக இருந்த பண்டாரநாயகா, நட்புணர்வு அடிப்படையில் இந்திராவிடம் கச்சத்தீவை கேட்க, அவர் தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டார். அது, இந்தியாவின் ஒரு பகுதி. கச்சத்தீவை கொடுப்பதற்கு முன், தமிழக மீனவர்கள் அங்கு தான் மீன் பிடித்தனர். எனவே, அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். கச்சத்தீவை கொடுக்கக்கூடாது என, தி.மு.க., கடுமையாக எதிர்த்திருக்க வேண்டும்; ஆனால், செய்யவில்லை.அதற்கு பச்சைக்கொடி காட்டி விட்டார் கருணாநிதி. பார்லிமென்டில் விவாதம் இல்லாமல், கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. ஏன் கொடுத்தனர் என்றால், அன்று சர்க்காரியா கமிஷன் விசாரணையில், இந்திரா உள்ளே போட்டு விடுவார் என்று பயந்து, கச்சத்தீவை தாரை வார்க்க கருணாநிதி சம்மதித்து விட்டார். கடந்த 1991ல் சுதந்திர தின விழாவில், கச்சத்தீவை மீட்போம் என்றார் ஜெயலலிதா. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தார். நாங்கள் மத்திய அரசில் அங்கம் வகிக்கவில்லை. தி.மு.க., 17 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் இருந்தது; அப்போதாவது கச்சத்தீவை மீட்டிருக்கலாம். அப்போதும் வாயே திறக்கவில்லை. இப்போது ஸ்டாலின் கச்சத்தீவை மீட்போம் என்கிறார். இதை மீனவ மக்கள் நம்புவரா. ஜெயலலிதா ஒருபுறம் போராடினாலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், தி.மு.க., தன்னை இணைத்துக் கொள்ளவில்லை. பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் நடவடிக்கை எடுத்திருக்கலாம்; ஆனாலும் செய்யவில்லை. மீனவர்கள் தாக்கப்படும் போது, கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. இவ்வாறு ஜெயகுமார் கூறினார்.








      Dinamalar
      Follow us