விவசாய நிலத்தை பதிய மறுக்கக்கூடாது சார்- பதிவாளர்களுக்கு புதிய உத்தரவு
விவசாய நிலத்தை பதிய மறுக்கக்கூடாது சார்- பதிவாளர்களுக்கு புதிய உத்தரவு
ADDED : ஜூலை 13, 2024 12:26 AM
சென்னை: பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சார்-பதிவாளர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு:
மோசடி பத்திரங்களை ரத்து செய்வதற்கான சட்டத்திருத்தத்தை அமல்படுத்துவதில், உயர் நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்தது. இதை சரியாக புரிந்து கொள்ளாமல், பெரும்பாலான சார்- பதிவாளர்கள் செயல்படுவதாக புகார்கள் வருகின்றன.
சொத்துக்கள் பரிமாற்றம் செய்ய ஆட்சேபம் தெரிவித்து, யாராவது மனு கொடுத்தால், அதை ஏற்று பதிவுக்கு வரும் பத்திரத்தை நிராகரிக்க கூடாது. மனுவில், சான்று ஆவணங்கள் முழுமையாக இல்லாவிட்டாலோ அல்லது தடை மனு கொடுப்பவருக்கு, குறிப்பிட்ட சொத்தில் உரிமை கோரவும், ஆட்சேபம் தெரிவிக்கவும், சட்டப்பூர்வ ஆதாரம் இருந்தால் மட்டுமே நிராகரிக்க வேண்டும்.
சொத்தின் மதிப்பு குறைவாக குறிப்பிட்டிருந்தால், உரிய விசாரணை நடத்தி, 47 - ஏ விதிப்படி மேல்முறையீட்டு ஆய்வுக்கு அனுப்ப வேண்டுமே தவிர, பத்திரத்தை நிராகரிக்க கூடாது
விற்பனை சான்றிதழ்
கடனில் மூழ்கிய சொத்துக்களை, கடனீட்டு சட்டத்தின்படி வங்கிகள் ஏலம் விடுகின்றன. இதை ஏலத்தின் எடுப்பவருக்கு, விற்பனை சான்றிதழை பதிவு செய்ய மறுத்தால், சம்மந்தப்பட்ட சார்- பதிவாளர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்
பதிவுக்கு வரும் சொத்துக்கு பட்டா உள்ளிட்ட வருவாய் துறை ஆவணங்கள் முறையாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டுமே தவிர, அதற்காக ஆவணங்களின் உண்மை தன்மையை சரிபார்க்க வேண்டும் என பொதுமக்களை அலைகழிக்க்கூடாது.
விவசாய நிலங்களை மனைப்பிரிவாக பதிவு செய்யக்கூடாது. ஆனால், குறைந்த பரப்பளவு விவசாய நிலங்களை, விவசாய நிலமாக விற்க, வாங்க தடை இல்லை. சாலையை ஒட்டியுள்ளது என்று கூறி, குறைந்த பரப்பளவில் கைமாறும் விவசாய நிலங்களை பதிவு செய்ய மறுக்கக்கூடாது. இந்த விஷயங்களில், சார்-பதிவாளர்கள் முறையாக செயல்படுவதை, மாவட்ட பதிவாளர்கள், டி.ஐ.ஜி.,க்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார்.

