தேர்தல் முடிவுகளுக்கு பின் தி.மு.க.,வினர் ஜெயிலில் அல்லது பெயிலில் இருப்பார்கள் பா.ஜ., தேசிய தலைவர் நட்டா பேச்சு
தேர்தல் முடிவுகளுக்கு பின் தி.மு.க.,வினர் ஜெயிலில் அல்லது பெயிலில் இருப்பார்கள் பா.ஜ., தேசிய தலைவர் நட்டா பேச்சு
ADDED : ஏப் 17, 2024 01:15 AM

பரமக்குடி:-ஜூன் 4ல் தேர்தல் முடிவுகளுக்குப் பின் தி.மு.க., வினர் ஜெயிலில் அல்லது பெயிலில் இருப்பார்கள் என்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடந்த ரோடு ேஷாவில் பங்கேற்ற பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசினார்.
ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று காலை பரமக்குடியில் ரோடு ேஷாவில் பங்கேற்றார்.
அவருடன் பன்னீர்செல்வம், எம்.பி.,க்கள் தர்மர், ரவீந்திரநாத், பா.ஜ., மாவட்டத்தலைவர் தரணிமுருகேசன், மாவட்ட பார்வையளார் முரளிதரன் உள்ளிட்டோர் பிரசார வாகனத்தில் வந்தனர். ரோட்டின் இருபுறம் திரண்டிருந்த மக்கள் மலர் துாவி வரவேற்றனர். மக்கள் மீது நட்டா மலர்களை துாவி உற்சாகப்படுத்தினார்.
பிரசார வாகனம் பஸ் ஸ்டாண்ட் வழியாக நேதாஜி ரோட்டிலிருந்து காந்திசிலை அருகே நிறைவு பெற்றது.
அங்கு நட்டா பேசியதாவது: உங்களிடம் காணப்படும் உற்சாகம், எழுச்சியை பார்க்கும் போது பன்னீர்செல்வத்தை டில்லிக்கு எம்.பி., யாக அனுப்ப தயாராகி விட்டீர்கள் என்பது தெரிகிறது. தமிழகத்திற்காக போராடுபவர் பன்னீர்செல்வம்.
தற்போது நடக்கும் தேர்தல் 2047ல் வளர்ச்சியடைந்த பாரதமாக இருக்க வேண்டும் என்பதற்கானது. நமது கூட்டணியில் 400 எம்.பி.,க்கள் வெற்றி பெற்று அரசு அமைய வேண்டும் என்பதற்கான தேர்தல். பிரதமர் மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் பெண்கள் தங்களுக்கான அனைத்து வசதிகளையும் பெற்றுள்ளார்கள்.
ஏழை மக்களுக்கு ஆயுஷ்மான் பாரத், உஜ்வாலா திட்டம், வீடுகள் கட்டும் திட்டம், ரேஷனில் 5 கிலோ அரிசியும், ஒரு கிலோ பருப்பும் இலவசமாக வழங்கி வருகிறோம். வரும் 5 ஆண்டுகள் தொடர்ந்து இவை வழங்கப்படும். இதன் மூலம் 25 கோடி ஏழைகள் வறுமைக்கோட்டிலிருந்து வாழ்வு பெற்றுள்ளனர்.
தமிழகத்திற்கு வழக்கமாக வழங்கும் தொகையை விட 4 மடங்கு அதிகமாக மத்திய அரசு வழங்குகிறது. தமிழகத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
12 ஆயிரம் கி.மீ., தேசிய நெடுஞ்சாலை ரூ.48,000 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. சாலை மேம்பாடு, வான்வெளி போக்குவரத்து, டிஜிட்டல் மேம்பாடு என பல்வேறு வளர்ச்சி திட்டங்களை இந்திய அரசு வழங்கியுள்ளது.
தி.மு.க., வுக்கு புது விளக்கம்
தி.மு.க., என்றாலே ஊழல் மிகுந்த கட்சி. தி.மு.க., வை சேர்ந்த 13 பேர் ஒரு லட்சம் கோடி சொத்து சேர்த்துள்ளனர். தி.மு.க., என்பது ('டி' பார் டைனஸ்டி) ஒரே குடும்பத்தை சேர்ந்த வாரிசு அரசியல். ('எம் ' பார் மணி லாண்டரிங்) பண சுரண்டல் மோசடியில் ஈடுபடுவது. 'கே' பார் கட்டப்பஞ்சாயத்து செய்வது. இது தான் தி.மு.க.
ஜூன் 4 ல் வரும் தேர்தல் முடிவுகளுக்கு பின் தி.மு.க., வினர் ஜெயிலில் இருப்பார்களா, பெயிலில் இருப்பார்களா என்பது தெரிய வரும். இவ்வாறு அவர் பேசினார்.
பன்னீர்செல்வம் பேசியதாவது:
பத்து ஆண்டுகள் சிறப்பான ஆட்சி தந்துள்ளார் மோடி. பல்வேறு மொழிகள், கலாச்சாரம் கொண்ட நாட்டை ஒரு குடைக்குள் கொண்டு வந்து சிறப்பான ஆட்சி தந்து கொண்டிருக்கிறார். 200 நாடுகள் பங்கேற்ற மாநாட்டில் உலகில் தலை சிறந்த நிர்வாகி பிரதமர் மோடி தான் என பிரகடனப்படுத்தியுள்ளனர்.
3-வது முறையாக பிரதமராக மோடி வருவதற்கான தேர்தல். உங்களில் ஒருவனாக லோக்சபா தேர்தலில் என்னை தேர்வு செய்தால் இந்த தொகுதியில் தங்கி குடிநீர் உட்பட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண்பேன் என்றார்.

