ரூ.33 லட்சம் வசூல் விவகாரம் அறிக்கை தர டி.ஜி.பி., உத்தரவு
ரூ.33 லட்சம் வசூல் விவகாரம் அறிக்கை தர டி.ஜி.பி., உத்தரவு
ADDED : ஏப் 03, 2024 12:34 AM
சென்னை:'பதவி உயர்வுக்கு, 33 லட்சம் ரூபாய் வசூல் நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து, விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக காவல் துறையில், 1997ல், நேரடி எஸ்.ஐ.,யாக பணியில் சேர்ந்து, 2007 - 2008ல், இன்ஸ்பெக்டராக, 68 பேர் பதவி உயர்வு பெற்றனர்.
இவர்களுக்கு, டி.எஸ்.பி.,யாக பதவி உயர்வு அளிக்க அரசு ஒப்புதல் அளித்தது. கடந்த மார்ச்சில், 57 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது; 11 பேருக்கு பதவி உயர்வு தரப்படவில்லை.
டி.ஜி.பி., அலுவலகத்தில் பதவி உயர்வுக்கான கோப்பு தயாரிப்பு பணியில் ஈடுபட்ட நபர் ஒருவர், காலி பணியிடங்களை மறைத்து, 57 பேருக்கு மட்டும் பதவி உயர்வு கிடைக்க வழி வகை செய்துள்ளார்.
இதன் பின்னணியில், 33 லட்சம் ரூபாய் வசூல் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
தற்போது சர்ச்சைக்குரிய அந்த நபர் வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார். அந்த இடத்தில் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், வசூல் விவகாரம் தொடர்பாக விசாரித்து, விரைவில் அறிக்கையை தாக்கல் செய்யும்படி, நிர்வாகப் பிரிவு ஐ.ஜி.,க்கு, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

