கணினி பிழைகளை சரிசெய்ய தாமதம்: பதிவுக்கு காத்திருக்கும் பத்திரங்கள்
கணினி பிழைகளை சரிசெய்ய தாமதம்: பதிவுக்கு காத்திருக்கும் பத்திரங்கள்
ADDED : ஏப் 07, 2024 01:38 AM

சென்னை: பத்திரப்பதிவு விபரங்களை கணினியில் உள்ளீடு செய்யும் போது, கவனிக்காமல் விடப்படும் பிழைகளை சரி செய்ய நீண்ட தாமதம் ஏற்படுவதால், பத்திரங்கள் பதிவுக்கு காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் சொத்து விற்பனைக்கான பத்திரப்பதிவு பணிகள், ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இதன்படி, சொத்து வாங்கும் நபர், அதற்கான கிரைய பத்திரத்தை தயாரித்த பின், அது தொடர்பான விபரங்களை பதிவுத்துறை இணைய தளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும்.
இவ்வாறு பதிவாகும் தகவல்கள் அடிப்படையில், அந்த பத்திரத்தை பதிவுக்கு ஏற்கலாமா என முடிவு செய்யப்படும்.
இதில் சொத்து வாங்குவோர் அளிக்கும் தகவல்களில், ஏதாவது பிழை இருப்பது இறுதி கட்டத்தில் தெரியவந்தால், பத்திரப்பதிவு நிறுத்தப்படும்.
கணினி சார்ந்த இது போன்ற பிழைகளை, பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் செயல்படும் தனிப்பிரிவு தான் சரி செய்ய முடியும். பொதுமக்கள் இந்த பிரிவுக்கு புகார் அளிக்க அனுமதியில்லை.
இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பத்திரப்பதிவின் போது சொத்து விபரங்கள், வகைபாடு தொடர்பான விபரங்களை கணினியில் பதிவிடும் போது, சில தவறுகள் ஏற்படுகின்றன. இந்த தவறுகளை கணினியில் சரி செய்து, பிரச்னையில் இருந்து சம்பந்தப்பட்ட பத்திரத்தை விடுவிக்க, டி.சி.எஸ்., வல்லுனர்கள் அடங்கிய குழுவுக்கு மட்டுமே அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு பத்திரம் தொடர்பாக தவறு நடந்தால், மாவட்ட பதிவாளர் வாயிலாக டி.ஐ.ஜி.,க்கு தெரிவிக்கப்படும். அவர் வாயிலாக மட்டுமே, டி.சி.எஸ்., வல்லுனர் குழுவுக்கு தெரிவிக்க முடியும். இவ்வாறு தெரிவிக்கப்படும் புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் நீண்ட தாமதம் ஏற்படுகிறது. இதனால், பத்திரங்கள் பதிவும் தாமதமாகிறது.
டி.சி.எஸ்., வல்லுனர் குழு ஆட்களை அதிகரிக்க வேண்டும்; இவர்கள் மேற்பார்வையில், மண்டல அளவில் சரி செய்ய வழி காண வேண்டும். இதுகுறித்து உயரதிகாரிகள் நிலையில் ஆலோசித்து வருகிறோம். தேர்தலுக்கு பின் தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

