ADDED : ஏப் 14, 2024 11:27 PM

உடுமலை : திருப்பூர் மாவட்டம், உடுமலை நகரில், தாராபுரம் சாலையில், 'என்.ஆர்.சி.,' கிளப் என்ற பெயரில், தனியார் மதுக்கூடம் செயல்பட்டு வருகிறது. அருகில், யு.எஸ்.எஸ்., காலனி குடியிருப்பு உள்ளது.
குடியிருப்பு வழித்தடத்தில், நாள்தோறும் 'குடி'மகன்கள் பிரச்னையில் ஈடுபடுவதை கண்டித்து மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
நேற்று மாலை, மதுக்கூடத்தில் இருந்து சென்ற 'குடி'மகன்கள், அருகிலிருந்த வீடுகளின் முன் நின்று பெண்களுடன் பிரச்னை செய்துள்ளனர். இதையடுத்து, அப்பகுதி மக்கள், பார் நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.
அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றி மக்கள், மதுக் கூடத்தில் இருந்த சேர் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினர்.
பின்னர், உடுமலை - தாராபுரம் நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர். உடுமலை டி.எஸ்.பி., சுகுமாறன் தலைமையில் போலீசார் பேச்சு நடத்தினர். மதுக்கூடத்தை உடனடியாக அகற்றும் வரை, போராட்டத்தை தொடர்வோம் என, வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

