தி.மு.க.,வினர் நடத்தும் பார்களிலும் 'கட்டிங்' வசூல்!
தி.மு.க.,வினர் நடத்தும் பார்களிலும் 'கட்டிங்' வசூல்!
ADDED : ஏப் 03, 2024 01:33 AM

''முத்தரையர் சமுதாய ஓட்டுகளை மொத்தமா வளைக்க சொல்லியிருக்கார் ஓய்...'' என்ற படியே, நண்பர்கள் மத்தியில் அமர்ந்தார் குப்பண்ணா.
''எந்த தொகுதியில, யாருங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''தஞ்சாவூர் தொகுதியில, அ.தி.மு.க., கூட்டணி சார்பில், தே.மு.தி.க., வேட்பாளரா சிவநேசன் போட்டியிடறார்... சசிகலா, தினகரன், திவாகரன் ஆதரவாளர்கள் அதிகம் இருக்கற இந்த தொகுதியை கோட்டை விட்டுடக் கூடாதுங்கறதுல, பழனிசாமி குறியா இருக்கார் ஓய்...
''பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவையாறு சட்டசபை தொகுதிகள்ல மட்டும், 5 லட்சம் முத்தரையர் ஓட்டுகள் இருக்காம்... இதனால, முக்குலத்தோர் மட்டுமில்லாம, முத்தரையர்கள் ஓட்டுகளையும் அ.தி.மு.க., அணிக்கு திரட்டணும்னு, டெல்டா பகுதி முன்னாள் அமைச்சர்கள் சிலரை பழனிசாமி களம் இறக்கி விட்டிருக்கார் ஓய்...
''இவா, முத்தரையர் சங்கங்களின் நிர்வாகிகளை பார்த்து பேசறா... அப்ப, 'வர்ற சட்டசபை தேர்தல்ல உங்க சமுதாயத்துக்கு அ.தி.மு.க.,வுல நிறைய சீட்கள் தர்றோம்... கட்சியிலயும் முக்கிய பதவிகள் தர்றோம்... இப்ப எங்களை ஆதரிக்கணும்'னு தீவிரமா பிரசாரம் பண்ணிண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''கிட்டத்தட்ட ஒரு வருஷமா பைல்கள் தேங்கி கிடக்கு வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த துறையில பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''பெரம்பலுார் தாலுகா ஆபீஸ்ல, சர்வே டிபார்ட்மென்ட் இருக்குல்லா... பொதுமக்கள், தங்களது நிலம், வீட்டுமனையை அளக்க இங்க விண்ணப்பம் குடுப்பாவ வே...
''ஆனா, புரோக்கர்கள் மூலமா போனா தான், பொதுமக்கள் நிலத்தை அளந்து குடுக்காவ... ரியல் எஸ்டேட் தொழில் பண்றவங்க மற்றும் வி.ஐ.பி.,க்களின் விண்ணப்பங்களை உடனே பைசல் பண்ணிடுதாவ... ஆனா, பொதுமக்கள் தர்ற விண்ணப்பங்கள் கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கும் மேலா பெண்டிங்குல கிடக்கு வே...
''இங்க சர்வேயர்களா வர்ற அதிகாரிகள், குறுகிய காலத்துலயே கோடிக்கணக்குல சேர்த்துடுதாங்க... 'இந்த ஆபீஸ்ல எல்லாம் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு நடத்தாதா'ன்னு பொதுமக்கள் புலம்புதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''தேர்தல் பணியில ஆர்வம் காட்டாம இருக்காங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''செந்தில் பாலாஜி ஜெயிலுக்கு போய், கரூர் கம்பெனி வசூல் வேட்டை முடிவுக்கு வந்தப்ப, 'தொல்லை ஒழிஞ்சது'ன்னு பார் ஓனர்கள் எல்லாம் சந்தோஷப்பட்டாங்க... ஆனா, இப்ப மறுபடியும் பார்கள்ல வசூல் வேட்டையை ஆரம்பிச்சுட்டாங்க...
''சேலம் மத்திய மாவட்டத்துல, 90க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இருக்கு... இதுல, 60க்கும் மேற்பட்ட கடைகள்ல ஆளுங்கட்சியினர் தான் பார்களை நடத்திட்டு இருக்காங்க...
''டாஸ்மாக் ஆளுங்கட்சி தொழிற்சங்க நிர்வாகிகள், பாருக்கு மாசத்துக்கு 50,000த்துல இருந்து 1 லட்சம் ரூபாய் வரைக்கும் வசூல் பண்ணி, கட்சி நிர்வாகிகளிடம் ஒப்படைக்குறாங்க... சொந்த கட்சியினரிடமே கட்டாயமா கட்டிங் வசூல் பண்றதால, பார் ஓனர்களா இருக்கிற தி.மு.க., புள்ளிகள், லோக்சபா தேர்தல் பணிகள்ல ஆர்வம் காட்டாம கமுக்கமா இருக்காங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.

