விலங்குகளிடம் பரவும் நோய்களை கட்டுப்படுத்துவது அவசியம்: சவுமியா
விலங்குகளிடம் பரவும் நோய்களை கட்டுப்படுத்துவது அவசியம்: சவுமியா
ADDED : ஜூலை 23, 2024 05:45 AM
சென்னை: ''நிபா வைரஸ் போன்ற நோய் பாதிப்பை தடுக்க, விலங்குகளிடம் பரவும் நோய்களை கட்டுப்படுத்தும் ஆராய்ச்சிகள் தேவை,'' என, மத்திய சுகாதாரத்துறை முதன்மை ஆலோசகர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.
சென்னை அண்ணா பல்கலையில், பயோ மெடிக்கல் துறை திறப்பு விழாவுக்கு வந்த அவர் கூறியதாவது:
மருத்துவ தொழில்நுட்பம் வளர்ந்தாலும், பெரும்பாலான உபகரணங்களை, வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்து பயன்படுத்துகிறோம். இவை அதிக விலை உள்ளவை.
மேலும், வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் தொழில்நுட்ப கருவிகள், நம் நாட்டின் தட்ப வெப்பநிலைக்கு சில நேரங்களில் சரியாக வேலை செய்வதில்லை.
எனவே, உள்நாட்டில் மருத்துவ கருவிகளை தயார் செய்ய வேண்டியுள்ளது.
குறிப்பாக முதியோருக்கான வீல் சேர், நடக்க உதவும் கருவிகள் உள்ளிட்டவை அதிகம் தேவை. இந்த கருவிகளுக்கு பற்றாக்குறை உள்ளதால், நாம் அவற்றை அதிக அளவில் தயாரிக்க வேண்டும்.
காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மாசுபாடு போன்றவற்றில் இருந்து தற்காத்து கொள்வதற்கு, அன்றாட வாழ்வியலுக்கு தேவையான கருவிகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய வேண்டும்.
கடந்த 2016 முதல் இந்தியாவில் 'ஜிகா' வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலில், புனேவில் ஒருவர் பாதிக்கப்பட்டார்.
இதையடுத்து, கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத்தில், 'சந்திப்புரா' வைரஸ் பரவியுள்ளது.
இவை, விலங்குகளிடம் இருந்து நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ பரவுவது தெரிகிறது.
இவற்றை கட்டுப்படுத்த, நாடு முழுதும் விலங்குகளின் ஆரோக்கியமற்ற தன்மை, அவற்றிடம் பரவும் நோய்கள் குறித்து கண்காணித்து, தடுப்பூசி தயாரிப்பது குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இதற்காக ஒரே சுகாதாரம் என்ற, 'ஒன் ஹெல்த்' திட்டம், மத்திய அரசால் துவங்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களும் இந்த திட்டத்தில் பங்களிக்க, மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இவ்வாறு கூறினார்.

