ADDED : ஏப் 14, 2024 02:51 AM

சென்னை : தமிழகத்தில், லோக்சபா தேர்தலில் தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., இடையில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. தி.மு.க., - அ.தி.மு.க., மட்டுமின்றி கூட்டணி கட்சிகளும் பல வாக்குறுதிகளுடன், தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.
தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய கட்சியான காங்கிரசும், மகளிருக்கு ஆண்டுக்கு, 1 லட்சம் ரூபாய் வழங்குவது உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பா.ஜ., கூட்டணியில், 20ல் பா.ஜ; அக்கட்சியின் தாமரை சின்னத்தில் கூட்டணி கட்சிகளின் நான்கு வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
மற்ற கட்சிகள் தங்களின் சின்னங்களில் போட்டியிடுகின்றனர். மத்தியில் ஆளுங்கட்சியான பா.ஜ., தேர்தல் அறிக்கையை இன்னும் வெளியிடாமல் உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் ஓட்டுப்பதிவுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ளது.
எனவே, ஒவ்வொரு தொகுதியிலும் பல ஆண்டுகளாக நிலவும் பிரச்னைக்கு தீர்வு, வேலைவாய்ப்புக்கான திட்டங்கள், மக்களின் எதிர்பார்ப்பை உள்ளடக்கிய வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட வேட்பாளர்களுக்கு, பா.ஜ., அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி, கோவைக்கான தேர்தல் அறிக்கையை, அந்த தொகுதி வேட்பாளரான தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் வெளியிட்டார்.
தஞ்சை தொகுதி பா.ஜ., வேட்பாளர் கருப்பு முருகனாந்தம், தஞ்சை தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டார். இதேபோல், மற்றவர்களும் வெளியிட உள்ளனர்.
இதுகுறித்து, பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் பா.ஜ., தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் ஓட்டுப்பதிவுக்கு முன் வெளியாக வாய்ப்புள்ளது' என்றார்.

