ADDED : ஏப் 07, 2024 02:07 AM
கோவை:கோவை, எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி, கருணாநிதி நகரை சேர்ந்த சூர்ய பிரியா, நேற்று காலை, 11:00 மணிக்கு, காரில், நவ இந்தியாவில் உள்ள தன் அலுவலகத்திற்கு சென்றார்.
சிங்காநல்லுார், இந்திரா கார்டன் பகுதியில், தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது, தன் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க, 50,000 ரூபாயை கொண்டு செல்வதாக தெரிவித்தார். அதற்கான, வங்கி விபரங்களை மொபைல் போனில் காட்டியுள்ளார்.
அப்போது, பணத்தை எண்ணிக் காட்டுவது போல் வீடியோ எடுத்திருக்கின்றனர். பின், '20 ரூபாய் இருந்தால் கொடுங்கள்' என, தேர்தல் பிரிவினர் கேட்டிருக்கின்றனர். தன் மொபைல் போன் கவரில் இருந்த, 10 ரூபாயை சூர்ய பிரியா கொடுத்ததும், 50,010 ரூபாய் இருந்தது போல் கணக்கு காட்டி, பணத்தை பறிமுதல் செய்தனர்.
அந்த பெண்ணை, போலீஸ் பாதுகாப்புடன் தெற்கு தாலுகா அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு விசாரித்த போது, 50,010 ரூபாய் இருந்ததாக, தேர்தல் பறக்கும் படையினர் தெரிவித்துள்ளனர்.
அதை மறுத்த சூர்ய பிரியா, 'வீடியோ எடுத்ததை மீண்டும் பாருங்கள்' என்று வாக்குவாதம் செய்ததால், அதிகாரிகள் கோபமடைந்து, பின், எழுதி வாங்கிக் கொண்டு, பணத்தை திருப்பிக் கொடுத்தனர்.
இச்சம்பவத்தால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சூர்ய பிரியா, கலெக்டருக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் புகார் அனுப்பி உள்ளார்.
சூர்ய பிரியா கூறுகையில், ''ஆவணங்கள் காட்டிய பிறகும், பணத்தை தேர்தல் பிரிவினர் பறிமுதல் செய்கின்றனர். படிப்பறிவுள்ள எங்களை பாடாய்படுத்தி விட்டனர். படிப்பறிவு இல்லாதவர்கள், பணம் எடுத்துச் செல்லும் போது, இவர்களிடம் சிக்கி, எவ்வளவு கஷ்டப்படுவர் என நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது,'' என்றார்.

