8 நகரங்களுக்கு முழுமை திட்டம்; கருத்து கூற அவகாசம்
8 நகரங்களுக்கு முழுமை திட்டம்; கருத்து கூற அவகாசம்
ADDED : ஏப் 08, 2024 06:13 AM
சென்னை : கோவை, மதுரை உள்ளிட்ட எட்டு நகரங்களுக்கான முழுமை திட்டத்தின் வரைவு ஆவணம் தொடர்பாக, பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கான அவகாசம், மே 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னைக்கு வெளியில் உள்ள பகுதிகளின் நகர்ப்புற திட்டமிடல் பணிகள், நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி.,யின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றில், 90 சதவீத பகுதிகளுக்கு முழுமை திட்டங்கள் இல்லை என்று கூறப்படுகிறது.
இதனால், முறையான திட்டமிடல் இன்றி, பெரும்பாலான பகுதிகளில் நகர்ப்புற வளர்ச்சி அதிகரிக்கிறது. இதற்கு தீர்வாக, எதிர்கால வளர்ச்சியை கருத்தில் வைத்து, முறையான முழுமை திட்டங்கள் உருவாக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இதன்படி, கோவை, மதுரை, ஈரோடு, திருப்பூர், திருச்சி, சேலம், திருநெல்வேலி, வேலுார் ஆகிய எட்டு நகரங்களுக்கு, புதிய முழுமை திட்டங்கள் தயாரிக்கஉத்தரவிடப்பட்டது.
டி.டி.சி.பி., அதிகாரிகள் பல்வேறு கல்வி நிறுவனங்களுடன் இணைந்து, இதற்கான வரைவு ஆவணங்களை தயாரித்தனர். இந்த ஆவணங்கள், பிப்., 7ல் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டன.
இவற்றின் மீது, பொதுமக்கள், கட்டுமான துறையினர் தங்கள் கருத்துக்களை, 60 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று அரசு அறிவித்தது. கருத்து தெரிவிப்பதற்கான அவகாசம் ஏப்., 6ல் முடிந்தது.
இந்நிலையில், எட்டு நகரங்களின் வரைவு முழுமை திட்ட ஆவணம் தொடர்பாக, மே 15 வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என, டி.டி.சி.பி., உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட அலுவலகங்களுக்கு இது தொடர்பான அறிவுறுத்தல்களை, டி.டி.சி.பி., இயக்குனர் கணேசன் பிறப்பித்துஉள்ளார்.

