புதிய திட்டத்தில் கட்டட அனுமதி அதிக கட்டணம் வசூல் என புகார்
புதிய திட்டத்தில் கட்டட அனுமதி அதிக கட்டணம் வசூல் என புகார்
ADDED : ஜூலை 23, 2024 09:33 PM
கோவை:ஆன்லைன் வாயிலாக கட்டட வரைபட அனுமதி பெற, கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில், 2,500 சதுரடி வரையுள்ள மனையில், 3,500 சதுர அடிக்குள் குடியிருப்பு கட்டடம் கட்ட, எளிதாக அனுமதி பெறும் வசதி, அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இதற்கு, www.onlineppa.tn.gov.in என்ற இணைய தளத்தில், வீடு கட்டுவோர் சுயசான்று அடிப்படையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரருக்கு ஒற்றை சாளர முறையில் உடனடியாக அனுமதி வழங்கப்படும். நேரம் மிச்சமாகும். விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்திய பின், 'கியூஆர்' குறியீடுடன், கட்டட அனுமதி மற்றும் வரைபடங்களை உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இடம் ஆய்வு செய்வதில் இருந்தும், கட்டட முடிவு சான்று பெறுவதில் இருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது என அரசு தெரிவித்துள்ளது.
மனையை வாங்கியதற்கான பத்திரம், பட்டா, வில்லங்க சான்று, உரிமையாளரின் ஆதார், கட்டட வரைபடம் ஆகியவற்றின், 'ஸ்கேன்' செய்யப்பட்ட பிரதிகளை, ஆன்லைன் முறையில் உள்ளீடு செய்தால், அடுத்த 30 நிமிடங்களில் கட்டண விபரம் தெரியும்.
அந்த கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தினால், ஒரு மணி நேரத்தில் கட்டட அனுமதி ஆவணம் வந்து விடும். ஆனால், ஆன்லைன் வாயிலாக சுயசான்று அடிப்படையில் கட்டட அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போது, ஏற்கனவே இருந்த கட்டணத்தை விட அதிக கட்டணம் செலுத்த வேண்டி உள்ளதாக, புகார் தெரிவிக்கப்படுகிறது.
உரிமம் பெற்ற கட்டட அளவையர் ஒருவர் கூறியதாவது:
சுயசான்று நடைமுறை அமல்படுத்தும் முன், இரண்டாம் நிலை நகராட்சியில், கட்டட அனுமதிக்கான கட்டணம் சதுர அடிக்கு ரூ.44 என, இருந்தது. ஆனால், தற்போது அது, ரூ.79 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
முன்பு, 3400 சதுரஅடிக்கு, 18 ஆயிரத்து, 595 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. தற்போது, ரூ.36 ஆயிரம் நிர்ணயிக்கப்படுகிறது. இதேபோல், முதல்நிலை மாநகராட்சிகளுக்கு, சதுர அடிக்கு ரூ.88 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 3400 சதுரஅடி கட்டட அனுமதிக்கு, ரூ.2.99 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
ஆனால், நேரடியாக அனுமதி பெறும் முறையில், 3,400 சதுரஅடிக்கு, ரூ1.96 லட்சம் கட்டணமாக செலுத்தினால் போதும். சுயசான்று முறையில், ரூ.1.02 லட்சம் கட்டணம் கூடுதலாக செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.

