ADDED : ஏப் 26, 2024 08:59 PM

திண்டுக்கல்:திண்டுக்கல்லிலிருந்து பொள்ளாச்சி செல்லும் அரசு பஸ்சில் டிஜிட்டல் பெயர் பலகையில் சீன மொழியில் ஊர் பெயர்கள் வந்த விவகாரத்தில் கவனக்குறைவாக பணியாற்றிய போக்குவரத்து கழக ஊழியர்கள் மூவருக்கு மெமோ வழங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டிலிருந்து தினமும் வெளி மாவட்டங்களுக்கு நூற்றுக்கு மேலான அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றது. இந்நிலையில் ஏப்.25ல் இரவு 10:30 மணிக்கு திண்டுக்கல்லிலிருந்து பொள்ளாச்சி செல்லும் அரசு பஸ் தயார் நிலையில் இருந்தது. இந்த பஸ் பின்புறத்தில் உள்ள டிஜிட்டல் பெயர் பலகையில் திடீரென சீன மொழியில் ஊர் பெயர்கள் வந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்த பயணிகள் இது பொள்ளாச்சி செல்லும் பஸ் தானா இல்லை வேறு ஏதாவது ஊருக்கு செல்லுமா என சந்தேகத்தில் அங்குமிங்குமாய் சுற்றி திரிந்தனர்.
தொடர்ந்து பயணிகள் கண்டக்டர், டிரைவரிடம் தங்கள் சந்தேகத்தை கேட்டபடி பஸ்சில் ஏறி அமர்ந்திருந்தனர். இந்த சம்பவம் திண்டுக்கல்லில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து திண்டுக்கல் மண்டல போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பஸ்சில் டிஜிட்டல் பலகை மதர் போர்டு புதிதாக மாற்றப்பட்டுள்ளது. அது சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ளதால் சீன மொழி வந்துள்ளது.
இதை புதிதாக ஆன் செய்யும்போது தமிழ் மொழிக்கு மாற்ற வேண்டும். இதை அரசு பஸ்சில் கவனக்குறைவாக பொருத்திய போக்குவரத்து கழக ஊழியர்களான எலக்ட்ரீசியன், டெக்னீசியன், மேற்பார்வையாளர் என மூவருக்கு துறை ரீதியான நடவடிக்கையாக மெமோ வழங்கப்பட்டுள்ளது.

