ADDED : ஆக 27, 2024 02:10 AM

திருச்சி: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருச்சியில் நேற்று அளித்த பேட்டி:
பழனியில் நடைபெற்றது முத்தமிழ் முருகன் மாநாடு போல இருந்ததா என்றால், கேள்விக்குறி தான். முருகனை தொட வேண்டிய காலம் அவர்களுக்கு வந்து விட்டது.
அதனால், முருகன் பெயரை வைத்து, ஏதோ செய்து கொண்டிருக்கின்றனர். நான் இல்லாவிட்டால், பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற்று இருக்காது.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்று சட்டம் கொண்டு வந்தாலும் அதை செயல்படுத்த முடிந்ததா?
கணவன் திருச்சியில் எஸ்.பி.,யாகவும், மனைவி புதுக்கோட்டையில் எஸ்.பி.,யாகவும் எந்த வழிமுறையில் அடுத்தடுத்த மாவட்டங்களில் பணியை பெற்றுள்ளனர்.
திருட்டு ரயில் ஏறி வந்தவர்களுக்கு இருவரும் வேலை செய்கின்றனர். ஐ.பி.எஸ்., படித்திருந்தால், அதிகாரியாக வேலை பார்க்க வேண்டும். தி.மு.க.,வுக்கு வேலை பார்க்க வேண்டும் என்றால், எஸ்.பி., பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அந்த கட்சியின் ஐ.டி., விங்கில் சேர்ந்து கொள்ள வேண்டும்.
தமிழகத்துக்கு 10 லட்சம் கோடி தொழில் முதலீடு பெற்றுள்ளதாகவும், 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்திருப்பதாகவும் சொல்கிறார் முதல்வர். ஸ்டாலின் போகிற போக்கில் பொய் சொல்லக்கூடாது. இதற்காக விரைவில் வழக்கு போடப் போகிறேன்.
முதல்வர் வெளிநாடு செல்லவிருக்கிறார். அதற்கு முன், கட்சியின் மூத்த தலைவரான துரைமுருகன் போன்ற ஒருவரை துணை முதல்வராக்க வேண்டும். துரைமுருகனுக்கும் அப்படியொரு எதிர்பார்ப்பு இருக்குமில்லையா?
பழனிசாமியை தற்குறி என்றெல்லாம் பேசுவது தவறு. இங்கு இருக்கும் அரசியல் தலைவர்களில் நல்ல புத்திசாலி அவர் தான். அரசியல் கட்சித் தலைவர்களை மோசமாக விமர்சிக்கும் போக்கை ஏற்படுத்தியது தி.மு.க., தான்.
இவ்வாறு அவர் கூறினார்.

