மோசடி பத்திர ரத்து அதிகாரம் நிறுத்தி வைப்பு சென்னை ஐகோர்ட் அதிரடி
மோசடி பத்திர ரத்து அதிகாரம் நிறுத்தி வைப்பு சென்னை ஐகோர்ட் அதிரடி
ADDED : மார் 26, 2024 11:11 PM
சென்னை:உரிமையாளர்களுக்கு தெரியாமல், ஆள்மாறாட்டம் மற்றும் மோசடி செய்து மேற்கொள்ளப்படும் சொத்து ஆவணங்கள் பதிவை ரத்து செய்ய, மாவட்ட பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில், 2022 ஆகஸ்டில் தமிழக அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது.
பின், மாநிலம் முழுதும் மோசடி பத்திர பதிவுகள் தொடர்பாக, ஏராளமான புகார்கள் பெறப்பட்டன; ஆயிரக்கணக்கான பத்திர பதிவுகள், ரத்து செய்யப்பட்டன.
அரசின் இந்த புதிய சட்ட திருத்தத்தை எதிர்த்து, புதுக்கோட்டையை சேர்ந்த வளர்மதி உள்ளிட்ட பலர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைதொடர்ந்தனர்.
இந்த வழக்குகள், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தன.
அசாதாரண சூழல்
அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஜோதி வாதாடியதாவது:
வழிகாட்டுதல் இல்லாத அதிகாரங்கள், புதிய சட்ட திருத்தத்தின் கீழ் மாவட்ட பதிவாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதற்கென வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்படவில்லை. புகார் யார் அளித்தாலும், பத்திர பதிவு ரத்து செய்யப்படும். எப்படி விசாரிக்க வேண்டும்; விசாரணைக்கு உரிய காலவரம்பு என, எந்த விதிமுறைகளும் வகுக்கப்படவில்லை.
வானளாவிய அதிகாரத்தை மாவட்ட பதிவாளர்களுக்கு வழங்கினால், அசாதாரண சூழல் உருவாகும். துஷ்பிரயோகம் அதிகமாக நடக்கும் வாய்ப்புள்ளது. உதாரணமாக, 90 வயது மூதாட்டி ஒருவரின் பெயரில், 60 ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை ரத்து செய்யக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் வாதாடினார்.
அவகாசம்
தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''இந்த விவகாரம் தொடர்பாக, அரசின் நிலைப்பாட்டை அறிந்து தெரிவிக்க அவகாசம் வழங்க வேண்டும்,'' என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், சோதனை முறையில் பரிசீலித்த போது, சட்ட திருத்தத்தின்படி ஏராளமான புகார் மனுக்கள் பெறப்பட்டு இருப்பதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் வழங்கும் இந்த சட்டத் திருத்தம் குறித்து, ஏப்., 4ல் பதிலளிக்க தமிழக அரசை அறிவுறுத்தியதுடன், அதுவரை சட்ட திருத்தத்தின் அடிப்படையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை தள்ளிவைத்தனர்.

