அண்டை மாநிலங்களுக்கு மாடுகளை கொண்டு செல்ல தடை கோரி வழக்கு
அண்டை மாநிலங்களுக்கு மாடுகளை கொண்டு செல்ல தடை கோரி வழக்கு
ADDED : மார் 23, 2024 08:26 PM
சென்னை:சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனு விபரம்:
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சட்ட விரோதமாக அடிமாடுகளை கொண்டு செல்ல தடை விதிக்கக்கோரி, 2002ல் வழக்கு தொடர்ந்தேன்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், உரிய சான்றிதழ் இல்லாமல் அண்டை மாநிலங்களுக்கு மாடுகளை கொண்டு செல்ல தடை விதித்தது.
இந்த உத்தரவு முறையாக பின்பற்றப்படவில்லை என, 2007ல் தொடர்ந்த நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில், உரிய சான்றிதழ்களுடன் மட்டுமே மாடுகளை கொண்டு செல்ல அனுமதி வழங்க வேண்டும் என, அனைத்து சோதனை சாவடிகளுக்கும் அறிவுறுத்தி உள்ளதாக, டி.ஜி.பி., நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இருப்பினும், ஆயிரக்கணக்கான மாடுகள் உரிய சான்றிதழ் இல்லாமல், அண்டை மாநிலங்களுக்கு ஒவ்வொரு வாரமும் கொண்டு செல்லப்படுகின்றன. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில், அடுத்த மூன்று ஆண்டுகளில், நாட்டு மாடு இனங்கள் இல்லாத நிலை உருவாகும்.
எனவே, விலங்குகள் நல வாரியத்தின் சான்றிதழ் இல்லாமல், மாடுகளை லாரி உள்ளிட்ட வாகனங்களில் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில், அனைத்து சுங்கசாவடிகளிலும், தமிழக அரசு மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட வேண்டும்.
இவற்றை மீறி, மாடுகளை வாகனங்களில் கொண்டு சென்றால், அந்த வாகனங்களை பறிமுதல் செய்வதோடு, மாடுகளை மீட்டு கோ சாலையில் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும். வாகனங்களின் உரிமத்தையும் ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய முதல் பெஞ்ச் விசாரித்தது.
அப்போது, இந்த மனுவுக்கு தமிழக அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு, ஏப்., 8க்கு விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

