ஏ.டி.எம்.,களில் நிரப்ப கொண்டு செல்லப்பட்ட ரூ. 5 கோடி பறிமுதல் ஆவணம் சமர்பித்ததால் விடுவிப்பு
ஏ.டி.எம்.,களில் நிரப்ப கொண்டு செல்லப்பட்ட ரூ. 5 கோடி பறிமுதல் ஆவணம் சமர்பித்ததால் விடுவிப்பு
ADDED : ஏப் 07, 2024 01:09 AM
விருதுநகர்:விருதுநகர் சத்திரரெட்டியப்பட்டி சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஏ.டி.எம்.,களில் நிரப்ப வேனில் எடுத்துச் சென்ற ரூ. 5 கோடியை பறிமுதல் செய்தனர். பின்னர் ஆவணத்தை ஒப்படைத்ததால் விடுவித்தனர்.
மதுரையில் இருந்து விருதுநகரில் உள்ள வங்கி ஏ.டி.எம்.., களில் நிரப்புவதற்காக தனியார் நிறுவன ஊழியர்கள் வேனில் பணத்தை எடுத்து வந்தனர். விருதுநகர் சத்திரரெட்டியப்பட்டி சோதனை சாவடியில் நேற்று மதியம் 12:30 மணிக்கு வந்த வேனை, தேர்தல் பறக்கும் படை அலுவலர் கண்ணன், எஸ்.எஸ்.ஐ., அந்தோணிராஜ், போலீசார் ராமச்சந்திரன், பாலமுருகன், கன்னியம்மாள் சோதனை செய்தனர். அதில் இருந்த ரூ. 5 கோடியை வேனுடன் பறிமுதல் செய்து விருதுநகர் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
தனியார் நிறுவன ஊழியர்கள் அப்பணத்திற்கான உரிய ஆவணத்தை அதிகாரிகளிடம் வழங்கினர். ஆய்வு செய்த அதிகாரிகள் ஆவணம் சரியாக இருந்ததால் ரூ. 5 கோடியை வேனில் எடுத்து செல்ல அனுமதி அளித்தனர்.

