ADDED : ஜூன் 22, 2024 03:04 PM

சென்னை: 'நிர்வாகத் தோல்விகள் தெரியக் கூடாது என்ற பதற்றத்தில் தி.மு.க., அரசு பா.ஜ.,வினரின் ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்துகிறது. இந்த அடக்குமுறைக்கு எல்லாம் பா.ஜ., அஞ்சாது' என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: கள்ளச்சாராயம் விற்பனையைத் தடுக்காமல், ஐம்பதுக்கும் அதிகமான உயிர்களைப் பலி வாங்கிய திமுக அரசைக் கண்டித்து, பா.ஜ., சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், கிருஷ்ணகிரி என பல மாவட்டங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களில், மூத்த தலைவர் எச்.ராஜா உட்பட நூற்றுக்கணக்கான பா.ஜ., சகோதர சகோதரிகள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அடக்குமுறை
திமுக அரசின் நிர்வாகத் தோல்வியும், கள்ளச்சாராய வியாபாரிகளுடன் திமுகவினருக்கு உள்ள தொடர்பும், பொதுமக்களுக்குத் தெரிந்து விடக் கூடாது என்ற பதட்டத்தில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பா.ஜ., சகோதர சகோதரிகளை முடக்கப் பார்க்கிறது.
இந்த அடக்குமுறைக்கு பா.ஜ., அஞ்சப் போவதில்லை. பிற மாவட்டங்களிலும், இன்று கள்ளச்சாராய மரணங்களுக்குக் காரணமான திமுக அரசைக் கண்டித்து தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

