உலகில் பாரதம் தலை நிமிர்ந்து நிற்கிறது: மோகன் பகவத்
உலகில் பாரதம் தலை நிமிர்ந்து நிற்கிறது: மோகன் பகவத்
ADDED : ஜூலை 23, 2024 09:29 PM

நாகர்கோவில்:''பண்பாடுகளால் உலகில் பாரதம் தலைநிமிர்ந்து நிற்கிறது,'' என, கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் ரூ.ஒரு கோடி செலவில் அமைக்கப்பட்ட 1040 சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூறும் தியாகப்பெருஞ்சுவரை திறந்து வைத்து ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார்.
அவர் மேலும் பேசியதாவது: சீனாவை விட நம் நாடு பழமையான நாடு. உலகில் பல சாம்ராஜ்யங்கள் இருந்தாலும் அங்கு எல்லாம் நாகரீகங்கள் இருந்ததில்லை. நம் நாட்டில் நாகரீகம் இருந்ததால் தான் இன்று நம் நாடு உயிரோட்டத்துடன் இருந்து வருகிறது. அப்படிப்பட்ட நாட்டில் நாம் பிறந்திருப்பது பெருமைக்குரிய விஷயம்.
நாட்டின் பண்பாடு என்பது சாதாரணமாக வந்தது அல்ல. இந்த பண்பாட்டை உருவாக்குவதற்கும் பாதுகாப்பதற்கும் பல கோடி உயிர்கள் பலி கொடுக்கப்பட்டுள்ளது. எத்தனையோ வெளிநாட்டு தாக்குதல்கள் வந்தாலும் அதையெல்லாம் எதிர்த்து நாம் வெற்றி பெற்றுள்ளோம் என்ற பெருமை பாரதத்துக்கு உண்டு.
உலகத்தையே ஒரே குடும்பமாக பார்க்கும் பண்பாடு பாரத பண்பாடு. இயற்கையை வழிபடுவதும் நம் பண்பாடு. பல்வேறு மொழிகள் பேசினாலும் வேற்றுமையில் ஒற்றுமை காணும் பண்பாட்டை கொண்டது பாரதம். அப்படிப்பட்ட பண்பாட்டை பாதுகாத்து நாம் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டும்.
நாடு எப்போதுமே அடிமைத்தனத்தை ஏற்றுக் கொள்வதில்லை. நம்மை அடிமைப்படுத்தியவர்கள் நிம்மதியாக இருந்ததும் இல்லை. நாட்டின் மீது பல நாட்டினர் படையெடுத்து வந்தனர். நம்மோடு இருந்தார்கள். பின்னர் அதுபோல திரும்பி சென்றனர். நாட்டின் ஒரு எந்த பகுதியிலும் 10 கிலோமீட்டர் சுற்றளவை எடுத்துப் பார்த்தால் நிச்சயமாக அங்கு ஒரு சுதந்திர போராட்ட தியாகி இருந்திருப்பார். குறிப்பிட்ட பகுதியில் மட்டும் சுதந்திர போராட்டம் நடக்கவில்லை. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சுதந்திர போராட்டம் நடந்தது.
சுதந்திரத்துக்காக பாடுபட்ட முன்னோர்களை நாம் மறந்து விடக்கூடாது. நாட்டில் ஏழ்மை என்பது இருக்கக்கூடாது. அதை ஒழிக்க பாடுபட வேண்டும். உலகின் நன்மைக்காக பாரதம் நன்றாக இருக்க வேண்டும். சுதந்திரப் போராட்ட வீரர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள இந்த தியாக பெருஞ்சுவர் நாடு முழுவதும் வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், எம்.எல்.ஏ.,க்கள் நயினார் நாகேந்திரன், எம்.ஆர்.காந்தி, முன்னாள் எம்.எல்.ஏ., விஜயதரணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

