நில மோசடி வழக்கில் ஜாமின் வழங்க கூடாது: நீதிமன்றத்தில் நடிகை கவுதமி எதிர்ப்பு
நில மோசடி வழக்கில் ஜாமின் வழங்க கூடாது: நீதிமன்றத்தில் நடிகை கவுதமி எதிர்ப்பு
ADDED : ஆக 12, 2024 11:15 PM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் சுவாத்தான் பகுதியில் நிலம் வாங்கித்தருவதாக ரூ.3.16 கோடி மோசடி செய்த பா.ஜ., நிர்வாகி அழகப்பன், அவரது உறவினர்கள் உள்ளிட்ட 13 பேருக்கு ஜாமின் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து நடிகை கவுதமி நீதிமன்றத்தில் மனு செய்தார்.
சுவாத்தானில் 150 ஏக்கர் நிலம் வாங்கித்தருவதாக அழகப்பன் ரூ.3.16 கோடியை கவுதமியிடம் பெற்றார். இந்த 150 ஏக்கரில் மத்திய அரசின் செபி நிறுவனத்தால் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்ட பிளஸிங் அக்ரோ பார்ம் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் 64 ஏக்கரையும் சேர்த்து கவுதமிக்கு விற்று மோசடி செய்தார்.
இதையடுத்து இம்மோசடியில் ஈடுபட்டதாக அழகப்பன், அவரது மனைவி நாச்சியாள், புரோக்கர் நெல்லியான், பிளஸிங் அக்ரோ பார்ம் இந்தியா லிட் நிர்வாக இயக்குனர்கள் ஜோசப் ஜெயராஜ், பாக்கிய சாந்தி, ஜெயபாலன், சந்தான பீட்டர், அழகப்பன் மகன்கள் சொக்கலிங்கம் அழகப்பன், அழ. அழகப்பன், ஆர்த்தி அழகப்பன், அழகப்பன் நண்பர்கள் ரமேஷ் சங்கர் ேஷானாய், கே.எம்.பாஸ்கர், விசாலாட்சி ஆகிய 13 பேர் மீது நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில் கவுதமி மே மாதம் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இவ்வழக்கு ராமநாதபுரம் 2வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. கவுதமி ஆஜராகி அவரது தரப்பு வழக்கறிஞர் நாராயணன் மூலம் மனு தாக்கல் செய்தார். அழகப்பன் மற்றும் உறவினர்கள் மீது பல்வேறு நில மோசடி வழக்குகள் உள்ளதாலும், தற்போது சிறையில் உள்ளதாலும் ஜாமின் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். விசாரணையை தள்ளிவைத்து நடுவர் பிரபாகரன் உத்தரவிட்டார்.

