ADDED : மே 17, 2024 02:02 AM

சென்னை:பட்டியலின பெண்கள் குறித்து, நடிகர் கார்த்திக்குமார் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க, தேசிய பட்டியலின ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திரைப்பட பாடகி சுசித்ரா, சில தினங்களுக்கு முன் அளித்த பேட்டியில், அவரது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் ஓரின சேர்க்கையாளர் என்று குற்றம் சாட்டியிருந்தார். இதைத்தொடர்ந்து, நடிகர் கார்த்திக்குமார் குறித்த விவாதம் சமூக வலைதளங்களில் அதிகரித்தது.
அப்போது, பட்டியலின பெண்கள் குறித்து கார்த்திக்குமார் பேசியதாக, ஒரு ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த ஆடியோ குறித்து, அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவர் இளமுருகு முத்து, தேசிய பட்டியலின ஆணையத்தில் புகார் அளித்தார்.
அதையடுத்து, 15 நாட்களுக்குள் ஆடியோ குறித்த உண்மை தன்மையை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க, 'சைபர் கிரைம்' ஏ.டி.ஜி.பி.,க்கு தேசிய பட்டியலின ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அந்த ஆடியோ நடிகர் கார்த்திக்குமார் பேசியது தான் என கண்டறியப்பட்டால், வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.

