பன்னீர் மீதான சொத்து வழக்கு மறுஆய்வு தவிர்க்கும்படி வாதம்
பன்னீர் மீதான சொத்து வழக்கு மறுஆய்வு தவிர்க்கும்படி வாதம்
ADDED : ஏப் 23, 2024 12:46 AM

சென்னை: 'சொத்து குவிப்பு வழக்கில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை விடுவித்த உத்தரவை, தற்போது மறுஆய்வு செய்வதை தவிர்க்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அவரது குடும்பத்தினருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அனைவரையும் விடுவித்து, சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மறுஆய்வு செய்யும் விதமாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து, வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.
வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜா மற்றும் அவரது மனைவி சசிகலாவதி சார்பில், மூத்த வழக்கறிஞர் சீனிவாசன் வாதாடியதாவது:
வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுக்களின் மீது முடிவெடுக்க, ஆதாரங்களை ஆய்வு செய்ய தேவையில்லை.
சபாநாயகர், அரசு தலைமை வழக்கறிஞர், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆகியோரின் ஆலோசனைகளைப் பெற்ற பிறகே, வழக்கு தொடர ஏற்கனவே அளித்த அனுமதியை திரும்பப் பெற, அரசு முடிவெடுத்தது.
கடந்த 2012ல், பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை வழக்கில் இருந்து விடுவித்து, சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. 11 ஆண்டுகளுக்கு முன் பிறப்பித்த இந்த உத்தரவை, தற்போது மறுஆய்வு செய்வதை தவிர்க்க வேண்டும்.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் மரணமடைந்து விட்டனர். சாட்சிகள் பலரும் இறந்து விட்டனர்.
நீண்ட இடைவெளிக்குப் பின், இப்போது விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை நீதிமன்ற உத்தரவில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர்வாதாடினார்.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பு வாதத்துக்காக, விசாரணையை, வரும் 30ம் தேதிக்கு, நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.

