மழையில் நெல் நனைவதை தடுக்க கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்
மழையில் நெல் நனைவதை தடுக்க கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்
ADDED : மே 17, 2024 02:56 AM

சென்னை: மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்கிறது. இந்த நெல் அரிசியாக மாற்றப்பட்டு, ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படுகிறது.
நேரடி கொள்முதல் நிலையங்களில் போதிய இடவசதி இல்லை. இதனால், திறந்தவெளியில் நெல் மூட்டைகள் வைக்கப்படுகின்றன. அவை முறையாக பாதுகாக்கப்படாததால், மழையின் போது நனைந்து பாழாகின்றன. சில தினங்களாக பல மாவட்டங்களில் கோடை மழை பெய்கிறது.
எனவே, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலுார், மதுரை, திருநெல்வேலி, தென்காசி, திருவாரூர், ராணிப்பேட்டை உட்பட ஒன்பது மாவட்டங்களில், கொள்முதல் செய்யப்படும் நெல்லை பாதுகாக்க அதிகாரிகளுக்கு வாணிப கழகம் உத்தரவிட்டுள்ளது.
அம்மாவட்டங்களில், திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை, உடனே கிடங்குகளுக்கு அனுப்புமாறும், கிடங்குகளில் உள்ள நெல் மூட்டைகளை, அரவை ஆலைகளுக்கு அனுப்புமாறும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், திறந்தவெளியில் வைக்கப்படும் நெல் மூட்டைகளின் மேல் தார்ப்பாய் போட்டு, நனையாதவாறு பாதுகாக்குமாறும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த பணிகள் சரிவர மேற்கொள்ளப்படுகிறதா என்பதை கண்காணிக்க, ஒன்பது மாவட்டங்களுக்கும் தலா ஒருவர் வீதம் கண்காணிப்பு அதிகாரிகளை வாணிப கழகம் நியமித்துள்ளது.
மழையில் நனைந்த நெல்
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், ராமானுஜபுரம் ஊராட்சியில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. அங்குள்ள திறந்தவெளியில் நெல் மூட்டைகள் வைக்கப்பட்டிருந்தன.
நேற்று காலை ஸ்ரீபெரும்புதுார் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான மழை பெய்ததால், 1,300 நெல் மூட்டைகள் மழையில் நனைந்தன.

