UPDATED : ஏப் 17, 2024 07:24 AM
ADDED : ஏப் 17, 2024 02:02 AM

கோவை;சிவா சின்னசாமி. அமேசான், கூகுள், டெஸ்கோ, டார்கெட் என தொழில்நுட்பத்துறையின் மதிப்பு மிக்க நிறுவனங்களில் பணிபுரிந்தவர். டிஜிட்டல் பரிவர்த்தனையில் முன்னணியில் உள்ள கூகுள்பே செயலியை உருவாக்கிய அணியை இன்ஜினியரிங் இயக்குனராக வழிநடத்தியவர். இண்டியானா, ஹார்வர்ட் பல்கலைக் கழகங்களில் உயர்கல்வி பயின்றவர். அண்மையில், கோவை லோக்சபா தொகுயில் போட்டியிடும் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார். பெங்களூருவில் இருந்து கோவை வந்து அண்ணாமலைக்கு ஆதரவாக தன்னார்வலராக பணிபுரிகிறார்.
இதுபோன்ற உயர்நிறுவனங்களில் இருப்பவர்கள் வெளிப்படையாக அரசியல் பேசத் தயங்குவர். அவரது அரசியல் குரல் ஆச்சரியமளிக்கவே, அவரைச் சந்தித்தோம்.
அவர் பேசியதிலிருந்து…
பொதுவாக உயர் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வெளிப்படையாக அரசியல் பேசுவதில்லை. தயக்கமோ அல்லது நிறுவனத்தின் மீதான பயமோ காரணமாக இருக்கலாம். ஆனால், சரியான அரசியல் பேசுவது நமது கடமை.
அண்ணாமலையை ஏன் ஆதரித்துப் பேசினேன் என்றால், அவர் அளவுக்கு ஈர்த்தவர்கள் வேறு யாருமில்லை. காமராஜரைப் போல கறைபடியாத கை, ஏழைகளை நேசிக்கும் எம்.ஜி.ஆரின் பண்பு, ஜெயலலிதாவின் துணிச்சல், புத்திசாலித்தனம் என தமிழகத்தின் மூன்று பெரும் தலைவர்களின் நற்பண்புகள் இவரிடம் இருக்கிறது. நேர்மையானவர், எளிமையானவர். அதுவும் இளம் வயதில் இருப்பது அபூர்வமானது.
கர்நாடகாவில் ஐ.பி.எஸ்., அதிகாரியாக இருந்தபோதே அவர் பிரபலம். ஒரு காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்யக்கூடாது என மக்கள் போராடியது இந்தியாவிலேயே இவருக்காகத்தான் இருக்கும். பணம் கொழிக்கும் தென் பெங்களூரு பகுதியில் பணியிடத்தை மறுத்துவிட்டு, கிராமத்துக்குச் சென்று, தொண்டு நிறுவனம் துவக்கி, ஏழை மாணவர்களுக்கு உதவி செய்தவர் அண்ணாமலை. அப்போதே இவரைப் பிடித்தது. இவர் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன்.
அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டபோது, நேரடியாக அவரை ஆதரித்து பிரசாரம் செய்யவில்லை. ஒரு தயக்கம் இருந்தது. அவர் துப்பாக்கித் தொழிற்சாலை அமைத்துத் தருவதாக வாக்குறுதி கொடுத்திருந்தார். வெற்றி பெற்றிருந்தால், நிச்சயம் தொழிற்சாலை வந்திருக்கும். 10 ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்திருக்கும். அந்தத் தொழிற்சாலை கான்பூருக்கு சென்றுவிட்டது. அண்ணாமலையின் தோல்வியை, அரவக்குறிச்சியின் இழப்பாகவே பார்க்கிறேன்.
அப்போது நேரடியாக ஆதரித்திருக்கலாமோ என்ற குற்ற உணர்ச்சி இருந்தது. அரவக்குறிச்சி மக்கள் செய்த தவறை, கோவை மக்கள் செய்து விடக்கூடாது. எனவேதான், அண்ணாமலைக்கு ஆதரவாக தன்னார்வலராக களம் இறங்கினேன். கோவை மக்கள் பண அரசியல் தமிழகத்தில் எடுபடாது என்பதைக் காட்ட வேண்டும்.
மக்களை நம்பும் மோடி
படித்தவர்கள் எல்லாராலும் மக்களுக்கு நன்மை செய்து விட முடியாது. முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் ஹார்வர்டு பல்கலையில் படித்தவர். ஆனால், அவர் மக்கள் மீது நம்பிக்கை வைக்கவில்லை.டிஜிட்டல் பரிவர்த்தனையை அறிமுகம் செய்தபோது, இது வெற்றி பெறாது. சாமான்ய மக்களைச் சென்றடையாது என, கிண்டலடித்தார்.
பிரதமர் மோடி, ஹார்வர்டில் படித்தவரல்ல; ஆனால், மக்களிடம் படித்தவர். மக்கள் மீது நம்பிக்கை வைத்தார். என்மக்கள் தொழில்நுட்பத்தை வரவேற்பார்கள், அதை முழுமையாக பயன்படுத்தி முன்னேறுவர் என நம்பினார்.
50 ஆண்டுகளுக்கு தொலைநோக்காக சிந்திக்கும் அவர், 'ஜாம்' எனப்படும்ஜன்தன், ஆதார், மொபைல் ஆகியவற்றைஒருங்கிணைத்து, இன்று டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு உலகுக்கே முன்னோடியாக இந்தியாவை மாற்றிக் காட்டியிருக்கிறார்.
இந்தியாதான் உலகின் டிஜிட்டல் வல்லரசாக இருக்கப்போகிறது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தில், யு.பி.ஐ., பரிவர்த்தனை வெறும் துவக்கப்புள்ளிதான். இன்னும் ஏராளமான திட்டங்கள் வருகின்றன.
எந்தவொரு திட்டத்தையும் தொலைநோக்குப் பார்வையுடன் அணுகுவதால்தான் மோடியை எங்களுக்குப் பிடித்திருக்கிறது.
கோவையில், மிகத்திறமையான, நேர்மையான, துணிச்சலான, பிரதமருக்கு நெருக்கமான ஒருவர் வேட்பாளராக இருக்கிறார்.
தேர்தல் ஆணையம் ஒரு சாதாரண அமைப்பாக இருந்ததை, அதன் உண்மையான வலிமையை வெளிக்கொண்டு வந்தவர் சேஷன். அதைப்போல, அண்ணாமலை வென்றால், கோவை மட்டுமல்ல தமிழகத்தையே வேறு தளத்துக்கு உயர்த்துவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. மாற்றம் நிச்சயம் வரும் என்ற நம்பிக்கையுடன் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார் சிவா சின்னசாமி.

