உலகில் இந்தியா முதலிடம் பிடிக்கும் அரசியலில் மாற்றங்கள் ஏற்படும் ராமேஸ்வரம் கோயிலில் பஞ்சாங்கம் வாசிப்பு
உலகில் இந்தியா முதலிடம் பிடிக்கும் அரசியலில் மாற்றங்கள் ஏற்படும் ராமேஸ்வரம் கோயிலில் பஞ்சாங்கம் வாசிப்பு
ADDED : ஏப் 15, 2024 02:54 AM

ராமேஸ்வரம்: 'உலக அளவில் இந்தியா முதலிடம் பிடிக்கும். அரசியலில் மாற்றங்கள் ஏற்படும்,' என, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தமிழ் புத்தாண்டையொட்டி குருக்கள் பஞ்சாங்கத்தில் உள்ளதை வாசித்தார்.
தமிழ் புத்தாண்டையொட்டி இக்கோயிலில் இருந்து தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், பிரியாவிடை அம்மன் புறப்பாடாகி அக்னி தீர்த்த கரையில் எழுந்தருளினர். பின் பக்தர்களுக்கு தீர்த்தவாரி உற்ஸவம், சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து கோயில் ரத வீதியில் சுவாமி, அம்மன் ஊர்வலம் வந்து கோயிலுக்கு திரும்பினர். அங்கு கோயில் குருக்கள் உதயகுமார் பஞ்சாங்கம் வாசித்தார்.
அதில், இந்தியாவில் அதிக மழையால் விவசாயம் செழிக்கும். அதே நேரம் வெள்ளப்பெருக்கால் மக்களுக்கு பாதிப்பும் ஏற்படும். மத்திய அரசு பல நல்ல திட்டங்களை மக்களுக்கு வழங்கும். சித்தா, ஆயுர்வேத மருத்துவத்துறையில் சாதனை புரிந்து இந்திய விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடித்து சாதிப்பார்கள். இதன் மூலம் உலக அரங்கில் இந்தியா முதலிடம் பெற்று சாதனை படைக்கும். அரசியலில் குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும். ஆன்லைன் வர்த்தகம் மேலும் விரிவடையும்.
இந்திய விளையாட்டு வீரர்கள் மேலும் சாதனை படைப்பார்கள். போதை பொருள் புழக்கம் மேலும் அதிகரிக்க கூடும். கல்வி கட்டணம் உயரும். அதே நேரம் கல்வி சுமையும் குறையும். எல்லையில் போர் பதட்டம் இருக்கும். முன்னாள் அரசியல் தலைவர்களுக்கு பிரச்னை ஏற்படும்.
அரசியல் கூட்டணி மாறுபடும். அரசியல்வாதிகள் புதிய வழக்கில் சிக்குவார்கள். புதிய வரி உயர்வு குறிப்பாக மின்கட்டணம் மேலும் அதிகரிக்கக் கூடும். உலக அளவில் புதிய கொடிய நோய் பரவ வாய்ப்பு உள்ளது என குறிப்பிட்டார். கோயில் செயல் அலுவலர் முத்துச்சாமி, மேலாளர் பாண்டியன், பேஷ்கார்கள் கமலநாதன், பஞ்சமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

