ADDED : மே 17, 2024 01:44 AM
சென்னை:தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு, முதல் தவணையாக, 1,229.04 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், நடப்பாண்டு தமிழகத்திற்கு, 20 கோடி மனித நாட்களை, மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. ஒரு நாள் சம்பளமாக, 319 ரூபாய் நிர்ணயம் செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு தேவையான நிதி, மூன்று வகையாக பிரித்து வழங்கப்படுகிறது.
தொழிலாளர்களின் ஊதியத்திற்கான நிதியை, மத்திய அரசு, 100 சதவீதம் வழங்குகிறது. கட்டமான பொருட்கள் மற்றும் பணிகளுக்கான பொருட்களுக்கு தேவையான நிதியில், 75 சதவீதத்தை மத்திய அரசும், 25 சதவீதத்தை மாநில அரசும் வழங்கும். அலுவலர்களுக்கான ஊதியம் மற்றும் நிர்வாக செலவுக்கு தேவையான நிதி, 100 சதவீதத்தை மத்திய அரசு வழங்கும்.
வழிகாட்டி நெறிமுறைகளின்படி, பொருட்களுக்கான செலவினம், மொத்த நிதியில், 40 சதவீதத்துக்கு மேல் போகக்கூடாது. இதற்கு முதல் தவணையாக, 1,229.04 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் பங்கு, 921.78 கோடி; மாநில அரசின் பங்கு, 307.26 கோடி ரூபாய்.
நிதி ஒதுக்கீட்டிற்கான அரசாணையை, ஊரக வளர்ச்சித்துறை செயலர் செந்தில்குமார் வெளியிட்டுள்ளார்.

