அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் காலமானார்
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் காலமானார்
ADDED : ஏப் 10, 2024 02:46 AM

சென்னை : எம்.ஜி.ஆர்., கழக நிறுவனரும், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன், 98, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று சென்னையில் காலமானார்.
திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும், அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., உருவாக்க உறுதுணையாக இருந்தவருமான வீரப்பன், சில மாதங்களாக வயது மூப்பு காரணமாக, உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.
வெற்றி படங்கள்
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று காலை காலமானார்.
புதுக்கோட்டை மாவட்டம், வல்லத்திராக் கோட்டையில் பிறந்த வீரப்பனுக்கு, ராசம்மாள் என்ற மனைவியும், மூன்று மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருவரின் அமைச்சரவைகளில் இருந்துள்ளார்.
எம்.ஜி.ஆரின் தாயார், 'சத்யா' பெயரில் பட நிறுவனம் துவக்கி, அதில் எம்.ஜி.ஆர்., ரஜினி, கமல், சத்யராஜ் போன்றவர்களை கதாநாயகனாக நடிக்க வைத்து, பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
அ.தி.மு.க., ஆட்சியில், 1977 முதல் 1986 வரை எம்.எல்.சி., பதவி வகித்தார். பின், 1986ல் திருநெல்வேலியில் நடந்த இடைத்தேர்லில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின், அவரது மனைவி ஜானகியின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டார். ஜானகி முதல்வராவதற்கு உறுதுணையாக இருந்தவர். அ.தி.மு.க., இரண்டாக உடைந்து, ஜானகி அணி, ஜெயலலிதா அணி என பிரிந்த போது, ஜானகி அணிக்கு ஆதரவாக செயல்பட்டார்.
பிரிந்த அ.தி.மு.க., ஒன்றான பின், ஜெயலலிதா தலைமையை ஏற்றார்.
கடந்த 1991ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் காங்கேயம் தொகுதியில் வெற்றி பெற்று, ஜெ., அரசில் அமைச்சரானார். 1995ல் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்து, ரஜினி நடித்த, பாட்ஷா படம் வெற்றி படமாக அமைந்தது. அப்படத்தின் வெற்றி விழாவே ஆர்.எம்.வீரப்பனை அ.தி.மு.க.,விலிருந்து வெளியேற வைத்தது.
கருத்து வேறுபாடு
அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கும், ரஜினிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்த நேரம்.
பாட்ஷா படத்தின் வெள்ளி விழாவில் ரஜினி பேசுகையில், 'தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் அதிகரித்து விட்டது' என்றார். அப்போது, பிரபல இயக்குனர் மணிரத்னம் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தை கண்டித்தே, ரஜினி இப்படி பேசினார்.
இதற்கு, மேடையில் இருந்த அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் எந்த விளக்கமும், மறுப்பும் தெரிவிக்காததால், கோபமான முதல்வர் ஜெயலலிதா, ஆர்.எம்.வீரப்பனை அமைச்சர் பதவியில் இருந்தும் அ.தி.மு.க.,விலிருந்தும் நீக்கினார்.
அதனால், எம்.ஜி.ஆர்., கழகம் என்ற பெயரில் தனிக்கட்சி துவக்கினார். தொடர்ந்து அனைத்து தேர்தல்களிலும் தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு அளித்து வந்தார்.
அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலினும், தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களும், திரையுலகத்தினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

