ADDED : ஏப் 06, 2024 04:23 AM

புதுடில்லி: குறைந்த ஓட்டுப்பதிவு பதிவாகும், 266 தொகுதிகளை கண்டறிந்த தேர்தல் கமிஷன், ஓட்டுப்பதிவை அதிகரிக்க வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி, தேர்தல் பார்வையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
மொத்தமுள்ள 543 லோக்சபா தொகுதிகளுக்கு, வரும் 19ல் துவங்கி, ஜூன் 1 வரை ஏழுகட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் பதிவாகும் ஓட்டுகள், ஜூன் 4ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில், தலைநகர் டில்லியில் நேற்று, தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தேர்தல் பார்வையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், குறைந்த ஓட்டு பதிவாகும், 266 தொகுதிகள் கண்டறியப்பட்டன. இதில், கிராமப் புறங்களில், 215, நகர்ப்புறங்களில், 51 தொகுதிகள் அடங்கும்.
இந்த தொகுதிகள், பீஹார், உ.பி., - டில்லி, மஹாராஷ்டிரா, உத்தரகண்ட், தெலுங்கானா, குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஜார்கண்டில் இருப்பது தெரிய வந்தது. இந்தத் தொகுதிகளில், 2019 லோக்சபா தேர்தலில், தேசிய சராசரியான 67.40 சதவீதத்தை விட குறைவான ஓட்டுகள் பதிவாகின.
குறைந்த ஓட்டுப்பதிவு பதிவாகும் தொகுதிகளில், இந்த முறை ஓட்டுப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி, அந்தந்த தொகுதிகளின் தேர்தல் பார்வையாளர்களுக்கு தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் உத்தரவிட்டார்.
மேலும், ஓட்டுப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க, தொகுதிக்கு ஏற்றபடி செயல் திட்டங்களை வகுக்க உத்தரவிட்ட அவர்,ஓட்டுப்பதிவின் போது வரிசையை ஒழுங்குப்படுத்துவது, பார்க்கிங் வசதி போன்வற்றை செய்து தரும்படி அறிவுறுத்தினார்.
உள்ளூர் மக்கள், இளைஞர்கள் என, தொகுதி மக்களின் வாயிலாக தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும்படியும் கமிஷனர் ராஜிவ் குமார் வலியுறுத்தினார்.

