ADDED : மே 14, 2024 11:55 PM
மாமல்லபுரம்:கல்பாக்கம் அருகே,மரத்தில் கார் மோதிய விபத்தில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை சூளைப்பள்ளம் எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த மணி மகன் ராஜேஷ், 22, அதே பகுதியைச் சேர்ந்த காசி மகன் விக்னேஷ், 28, வடபழனியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் ஏழுமலை, 30. இவர்களுடன் மேற்கு மாம்பலத்தை சேர்ந்த யுவராஜ், 20, மற்றும் ஒருவர் என ஐந்து பேர் புதுச்சேரிக்கு காரில் சென்றுவிட்டு, நேற்று இரவு, சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர்.
கல்பாக்கம் அடுத்த, வாயலுாரில், இரவு 8:30 மணிக்கு வந்தபோது, சாலையில் குறுக்கே வந்த மாடு மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்ததில், கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
அப்பகுதியினர் விரைந்து சென்று, காரின் மேற்புறத்தை வெல்டிங் மிஷின் வாயிலாக அறுத்து, காரில் இருந்த மூன்று பேரை சடலமாக மீட்டனர். செங்கல் பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இருவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தனர்.
காரில் கள் வாசம் வீசியதாக அப்பகுதியினர் தெரிவித்தனர். இதுகுறித்து, சதுரங்கப்பட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.

