சாத்துார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து தொழிலாளர்கள் 4 பேர் உடல் கருகி பரிதாப பலி
சாத்துார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து தொழிலாளர்கள் 4 பேர் உடல் கருகி பரிதாப பலி
ADDED : ஜூன் 29, 2024 09:34 PM

சாத்துார்:விருதுநகர் மாவட்டம், சாத்துார் அருகே பந்துவார்பட்டி பட்டாசு ஆலையில் நேற்று காலை நடந்த பயங்கர வெடி விபத்தில், நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர்; மூன்று கட்டடங்கள் சேதமடைந்தன; ஒருவர் படுகாயம் அடைந்தார்.
சாத்துார் அச்சங்குளத்தைச் சேர்ந்த சகாதேவன், 42, என்பவருக்கு சொந்தமான, 'குரு ஸ்டார்' பட்டாசு ஆலை பந்துவார்பட்டியில் உள்ளது. டி.ஆர்.ஓ., உரிமம் பெற்ற இந்த ஆலையில், 17 அறைகள் உள்ளன. சோல்சா, பூஞ்சட்டி பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
நேற்று காலை 8:00 மணிக்கு தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டனர். பட்டாசுக்கு மருந்து செலுத்தும் அறையில், ஆலையின் கண்காணிப்பாளர் அச்சங்குளம் ராஜ்குமார், 42, நடுச்சூரங்குடி மாரிச்சாமி, 44, வெம்பக்கோட்டை சத்திரப்பட்டி செல்வகுமார், 52, மோகன், 42, ஆகியோர் பட்டாசுக்கு மருந்து செலுத்தினர்.
நேற்று முன்தினம் மீதமான பட்டாசு மருந்தை, பூஞ்சட்டி பட்டாசில் அடைத்த போது, உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து நடந்தது. மூன்று அறைகள் சேதமடைந்தன. இதில், ராஜ்குமார் உள்ளிட்ட நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர்.
ஆலை வாட்ச்மேன் ராமச்சந்திரன், 45, படுகாயமடைந்தார். அவர் சாத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சாத்துார், ஏழாயிரம்பண்ணை தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து இடிபாடுகளில் கிடந்த இறந்தவர்களின் உடல்களை மீட்டனர்.
ஆலை உரிமையாளர் சகாதேவனை டி.எஸ்.பி., சுரேஷ்குமார் தலைமையில் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர். வெடி விபத்து நடந்த பட்டாசு ஆலையை கலெக்டர் ஜெயசீலன், எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
கலெக்டர் கூறியதாவது:
பட்டாசு ஆலை முறையாக, டி.ஆர்.ஓ., லைசென்ஸ் பெற்று நடக்கிறது. நேற்று முன்தினம் மாலை மீதமான வேதியியல் பொருட்களை முறைப்படி அகற்றாமல் இருந்துள்ளனர்.
இந்த மீதமான பொருட்களை கொண்டு பட்டாசு தயாரிக்க முயன்றதால், உராய்வில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஆலையை உரிமம் பெற்றவரே நடத்தி வருகிறார். மாவட்டம் முழுதும் குத்தகை அடிப்படையில் அறைகளை வாடகைக்கு எடுத்து பட்டாசு தயாரித்த, 80 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா கூறுகையில், ''பட்டாசு தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் முறையான பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போதைய விபத்தில் பலியானவர்கள், பயிற்சி பெற்றவர்களா என்பது உரிய விசாரணைக்கு பிறகே தெரியவரும்,'' என்றார்.
வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் தலா, 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துஉள்ளார்.
இதையடுத்து, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையைச் சாத்துார் தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.
ஆலை நிர்வாகம் சார்பில் தலா 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், ரொக்கமாக 52,000 ரூபாயும் வழங்கப்பட்டன.

