உரிய சான்றிதழ் இல்லாமல் மாடுகளை கொண்டு சென்றதாக 378 வழக்கு பதிவு
உரிய சான்றிதழ் இல்லாமல் மாடுகளை கொண்டு சென்றதாக 378 வழக்கு பதிவு
ADDED : ஏப் 10, 2024 05:25 AM

சென்னை : விலங்குகள் நல வாரியத்தின் சான்றிதழ் இல்லாமல், மாடுகளை லாரி உள்ளிட்ட வாகனங்களில் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில், அனைத்து சுங்கச்சாவடிகளில் சோதனை செய்ய, தமிழக அரசு மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார்.
மனுவில், 'உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, மாடுகளை வாகனங்களில் கொண்டு சென்றால், அந்த வாகனங்களை பறிமுதல் செய்வதுடன், மாடுகளை மீட்டு கோசாலையில் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும். வாகனங்களின் உரிமத்தையும் ரத்து செய்ய வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி சத்திய நாராயண பிரசாத் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'உரிய சான்றிதழ் இல்லாமல் மாடுகளை கொண்டு சென்றதாக, 378 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன' எனக்கூறி, காவல் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, 'உரிய சான்றிதழ்களுடன் தான் அண்டை மாநிலங்களுக்கு, மாடுகள் கொண்டு செல்லப்படுகிறதா என, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மற்றும் காவல்துறை சரிபார்க்க வேண்டும்.
'விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், உடனே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாடுகளை அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்வது தொடர்பாக, 2007ல் டி.ஜி.பி., பிறப்பித்த சுற்றறிக்கையை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்' என, அறிவுறுத்திய நீதிபதிகள், வரும் 24க்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.

