3 நாட்களுக்கு வறண்ட வானிலை வெயிலின் தாக்கம் இன்னும் எகிறும்!
3 நாட்களுக்கு வறண்ட வானிலை வெயிலின் தாக்கம் இன்னும் எகிறும்!
ADDED : ஏப் 15, 2024 01:14 AM
சென்னை: 'தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில், அடுத்த மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும்' என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
ஆய்வு மையத்தின் அறிக்கை:
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், காற்றில் வேக மாறுபாடு காணப்படுகிறது. குமரிக்கடல், அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காணப்படுகிறது.
மழை பெய்ய வாய்ப்பு
இதனால், தமிழகத்தில் தென் மாவட்டங்கள், வட மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இருப்பினும், சில இடங்களில் வறண்ட வானிலையும் காணப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, நாளை மறுதினம் வரை, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் வறண்ட வானிலை காணப்படும். ஏப்., 18ல் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும்.
இதனால், வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு, வானம் மேகமூட்டமாக காணப்படும்; அதிகபட்ச வெப்பநிலை, 36 டிகிரி செல்ஷியசை ஒட்டியே பதிவாகும்.
இவ்வாறு அதில்குறிப்பிடப்பட்டுள்ளது.
8 நகரங்களில்...
நேற்று மாலை நிலவரப்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோடில், 39.4 டிகிரி செல்ஷியஸ், அதாவது 103 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
தர்மபுரி, கரூர் பரமத்தி, நாமக்கல், சேலம், திருப்பத்துார், திருத்தணி, வேலுார் நகரங்களில், 38 டிகிரி செல்ஷியஸ் அதாவது, 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் அடித்தது.

