வழிகாட்டி மதிப்புகள் மாற்றத்துக்கு பதிவுத்துறையில் 14 கட்டுப்பாடுகள்
வழிகாட்டி மதிப்புகள் மாற்றத்துக்கு பதிவுத்துறையில் 14 கட்டுப்பாடுகள்
ADDED : மே 20, 2024 12:12 AM

சென்னை: நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகளை மாற்றி அமைக்கும் பணிகளுக்கு, புதிய சாப்ட்வேர் பயன்படுத்த, 14 கட்டுப்பாடுகளை பதிவுத்துறை விதித்துள்ளது.
தமிழகத்தில் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகளை கடைப்பிடிப்பதில், பல்வேறு குழப்பங்கள் காணப்படுகின்றன.
இந்த விவகாரத்தில், நீதிமன்ற உத்தரவுகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க, அவசரகதியில் வழிகாட்டி மதிப்புகளை மாற்றி அமைக்கும் பணிகளை, பதிவுத்துறை மேற்கொண்டு வருகிறது. இதன்படி, 70 சதவீதம் வரை வழிகாட்டி மதிப்புகள் உயர்த்தப்பட உள்ளன.
தமிழகத்தில் முதல் முறையாக வழிகாட்டி மதிப்புகள் மாற்றத்துக்கு, புதிய சாப்ட்வேரை பதிவுத்துறை அறிமுகம் செய்துள்ளது. இதை பயன்படுத்துவது தொடர்பாக, 14 கட்டுப்பாடுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
பயன்பாட்டில் உள்ள வகைபாடுகளுக்கு புதிய மதிப்புகளை குறிப்பிட வேண்டும். அனைத்து தெருக்கள், சர்வே எண்களுக்கான மதிப்பையும், வகைபாடுகளுக்குள் அடங்கும் வகையில் மாற்ற வேண்டும்
அனைத்து சர்வே எண்கள், தெருக்களுக்கு புதிய மதிப்பை நிர்ணயிக்க வேண்டும். புதிய வகைப்பாட்டுக்கு மாற்றப்பட்ட தெரு, சர்வே எண்களை புதிய அலகாக கருத வேண்டும்.
பழைய மற்றும் புதிய வழிகாட்டி மதிப்பு விபரங்களை, சார் - பதிவாளர்கள் அச்சு பிரதியாக எடுத்து வைக்க வேண்டும்
சார் - பதிவாளர் நிலையில் இப்பணி முடிந்தவுடன், மாவட்ட பதிவாளர் நடவடிக்கை துவங்கும்.
தெரு மற்றும் சர்வே எண்களுக்கான மதிப்புகளில், மாவட்ட பதிவாளர் மாற்றம் செய்யலாம்; அதன்பின், மதிப்பு விபரத்தை இணையதளத்தில் வரைவாக சேர்க்கலாம்.
மாவட்ட துணைக்குழு ஒப்புதலுக்கு பின், மாவட்ட பதிவாளர் இந்த மதிப்புகளை இணையதளத்தில் பதிவேற்றலாம்
மதிப்பு நிர்ணயிக்கப்படாத சர்வே எண்கள், தெருக்களுக்கு புதிய மதிப்புகளை நிர்ணயிக்க வேண்டும். தற்போது நிர்ணயிக்கப்படும் மதிப்புகள் இறுதியானதாக கருதப்படும்.
இதனால், இந்த மதிப்புகள் உயர்ந்தும், சில இடங்களில் குறைந்தும் இருக்கலாம். புதிய தெருக்கள், சர்வே எண்கள் இதில் சேர்க்கப்படலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

