/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாணவர்களுக்கு போதுமான பஸ் வசதி இல்லை
/
மாணவர்களுக்கு போதுமான பஸ் வசதி இல்லை
ADDED : ஜூலை 19, 2025 11:29 PM

விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், சிவகாசி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி ஆகிய நகரங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படிப்பதற்காக ஏராளமான மாணவர்கள்தினமும் கிராமப்புறங்களில் இருந்து வந்து செல்கின்றனர்.
ஆனால் அவர்கள் வந்து செல்ல வசதியாக சரியான நேரத்தில், போதுமான அளவிற்கு பஸ்கள் இயக்கப்படாமல் உள்ளது. இதனால் பல கிராமங்களில் காலை 6:30 மணிக்கு புறப்பட்டு 7:30 மணிக்கே மாணவர்கள் பள்ளிக்கு வரும் நிலை காணப்படுகிறது. பஸ்களை பிடிக்க வேண்டிய அவசரத்தில் காலை உணவை கூட போதுமான அளவிற்கு சாப்பிடாமல் வருகின்றனர்.
இதேபோல் கல்லூரி துவங்கும் நேரத்தை சென்றடையும் வகையில் கிராமங்களில் இருந்து போதிய பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் கிடைக்கும் பஸ்களில் படிகளில் தொங்கிக்கொண்டு பயணிக்கும் நிலை மாவட்டத்தில் ஒவ்வொரு தாலுகாவிலும் காணப்படுகிறது.
அதிலும் திருச்சுழி, நரிக்குடி, காரியாபட்டி பகுதிகளில் பஸ்களின் கூரையில் உட்கார்ந்து ஆபத்தான முறையில் பயணிக்கும் நிலையும் உள்ளது.
மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் காணப்படும் இந்த நிலையால் கல்லூரி மாணவர்கள்ஒரு டூவீலரில் நான்கு பேர் வரை பயணித்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்துார்-சிவகாசி ரோட்டிலும், கிருஷ்ணன்கோவிலில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் ரோட்டிலும் அதிகளவில் டூவீலர்கள் மாணவர்கள் சென்று விபத்துகளுக்கு ஆளாகி வருகின்றனர்.
இதனால் தங்கள் வீட்டுப்பிள்ளைகள் தினமும் பள்ளி, கல்லூரிக்கு சென்று வரும் வரை பெற்றோர் மிகுந்த கவலையுடனும் மனவேதனையுடனும் உள்ளனர்.
பல்வேறு கிராமங்களில் காலை நேரங்களில் பஸ்கள்தாமதமாக வருவதோ அல்லது முன்கூட்டியே வந்து செல்வதால், அந்த பஸ்களை பிடிப்பதற்கு முடியாமல் மாணவர்கள் நடந்து செல்லும் நிலை காணப்படுகிறது.
இதுபோல் மாலை 4:30 மணிக்கு பள்ளிகள் முடியும் நிலையில் மாணவர்கள் பஸ் ஸ்டாண்ட், பஸ் ஸ்டாப்புக்கு வருவதற்கு 15 நிமிடம் ஆகும் நிலையில், சில பஸ்கள் அட்வான்ஸ் ஆக புறப்பட்டு செல்வதால் அடுத்த பஸ்சிற்காக ஒரு மணி நேரம் காத்திருக்கும் நிலை காணப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு கலைக் கல்லூரியில் காலை 10:00 மணிக்கு வகுப்புகள் தொடங்கும் நிலையில், பஸ் ஸ்டாண்டில் இருந்து காலை 8:15 மணியிலிருந்து 8:45 மணிக்குள் மூன்று பஸ்கள் சென்று விடுகிறது.
இதே போல் கீழ கொட்டல் பட்டி கிராமத்திற்கு இயங்கும் ஒரே பஸ் மாலை 4:30 மணிக்கே சென்று விடுவதால் பள்ளியில் இருந்து வரும் மாணவர்கள்அந்த பஸ்ஸை பிடிக்க முடியாமல் விலக்கு ரோட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே, காலை, மாலை பள்ளி, கல்லூரி வேலை நேரங்களில் கிராமப்புற மாணவர்கள் வந்து செல்ல வசதியாக கூடுதல்பஸ்கள் இயக்க அரசு போக்குவரத்துக் கழகமும்,மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பெற்றோரின் விருப்பமாகும்.

