/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இடி, மின்னல் நேரங்களில் அலட்சியத்தால் உயிரிழப்பு அபாயம்
/
இடி, மின்னல் நேரங்களில் அலட்சியத்தால் உயிரிழப்பு அபாயம்
இடி, மின்னல் நேரங்களில் அலட்சியத்தால் உயிரிழப்பு அபாயம்
இடி, மின்னல் நேரங்களில் அலட்சியத்தால் உயிரிழப்பு அபாயம்
ADDED : மே 14, 2024 12:26 AM
மாவட்டத்தில் கோடை மழை, பருவமழை காலங்களில் மின்னல் தாக்கம் அதிகமாக இருக்கும். மாவட்டத்தின் பரப்பளவு அதிகமாக உள்ளதால் வெட்டவெளிகளும் அதிகளவில் உள்ளன. இதனால் அதிகளவில் மின்னல் தாக்கி கால்நடைகள் பலியாவதும், மனிதர்கள் காயமடைந்து இறத்தலும் நடந்து வருகின்றன.
இப்போது மாவட்டத்தில் கோடை மழை பெய்ய துவங்கி உள்ளது. வரும் நாட்களிலும் மழை இருக்க வாய்ப்புள்ளது. மழை பெய்யும் போது பலத்த காற்றுடன், இடி, மின்னல் தாக்கம் அதிகமாகவே உள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன் 2022 ஜன. முதல் டிசம்பர் வரை 11 பேர் பலியாகி உள்ளனர். கடந்த ஆண்டும் பருவமழை போது மின்னல் தாக்கி பலர் இறந்துள்ளனர்.
தமிழக அளவில் விருதுநகர் மாவட்டத்தில் மின்னல் தாக்குவதில் பாதிக்கப்படுவது அதிகம் உள்ளது. கால்நடைகளை இழந்தால் விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக இழப்பு ஏற்படுகிறது. மக்கள் இடி, மின்னலினால் ஏற்படும் அபாயத்தை குறைத்து மதிப்பிடுவதாலும், விழிப்புணர்வு இல்லாததாலும் மனித உயிரிழப்புகள், காயங்கள் அதிகமாக ஏற்படுகின்றன.
மழை பெய்யும் போது இடி, மின்னல் நேரங்களில் பொதுமக்கள், அலைபேசி, தொலைபேசியை உபயோகிக்க வேண்டாம் என்றும், இடி சப்தம் கேட்கும் போது முற்றிலும் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், மின்னல் ஏற்படும் போது கால்நடைகளை மரத்தடியில் கட்டுவதை தவிர்ப்பது, உயர் மின்தடங்களை தாங்கி நிற்கும் கோபுரங்களுக்கு அருகில் செல்வதை தவிர்ப்பது ஆகியவற்றை செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் முன்பே தெரிவித்துள்ளது.
ஆனால் பலர் இன்றும் பின்பற்றுவது கிடையாது. இந்த அலட்சியமும் உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது.
சிறிய அளவு மின்சாரத்தை உணர்வது, உடல் உரோமங்கள் சிலிர்ப்பது அல்லது உடல் கூச்சம் ஏற்படுவது ஆகியவை மின்னல் தாக்குவதற்கான அறிகுறிகள். எனவே அப்போது தரையில் உடனடியாக அமர வேண்டும்.
இது தொடர்பாக பேரிடர் மேலாண்மைத்துறை பல்வேறு விழிப்புணர்வு காணொலிகளை வெளியிட்டு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தி உள்ளது.
இருப்பினும் இந்த இறப்புகளுக்கு மக்களின் 'வெறும் மழைதானே' என்ற அலட்சியமும் ஒரு காரணம். இது போன்ற அசாதாரண நேரங்களில் எவ்வாறு தப்பிக்க வேண்டும் என ஊரக பகுதிகளிலும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது தேவையாகி உள்ளது.

