ADDED : பிப் 03, 2024 04:12 AM
ஸ்ரீவில்லிபுத்தூர : ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வாழ்வு கொடுத்த கூட்டுறவு நூற்பாலையை மீண்டும் திறந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் 1962ல் காமராஜர் ஆட்சி காலத்தில் 50 ஏக்கர் பரப்பில் கூட்டுறவு நூற்பாலை துவக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் குறைந்த தொழிலாளர்களுடன் இயங்கியது. பின்னர் படிப்படியாக நூற்பாலை விரிவுபடுத்தப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றினர்.
இங்கு 40, 60, 80, 120 ரக வகை நூல்கள் தயாரிக்கப்பட்டு கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பப்பட்டு வந்தது. இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராம மக்கள் மிகுந்த பயனடைந்தனர். அங்கு பணியாற்றிய தொழிலாளர்களின் குடும்பங்கள் கல்வி, பொருளாதரத்தில் உயர்வடைந்தது. நகரிலும் பணப்புழக்கம் அதிகரித்து வியாபாரங்கள் சிறப்பாக நடந்தது.
1998 வரை லாபம் ஈட்டி வந்த இந்த நூற்பாலை தனி அதிகாரிகளின் நிர்வாக சீர்கேட்டால் படிப்படியாக வீழ்ச்சியை நோக்கி பயணிக்க துவங்கியது. இதனை சரி செய்து நூற்பாலை தொய்வின்றி செயல்படுவதற்காக மத்திய, மாநில அரசுகள் நிதி உதவி செய்தது. மேலும் பர்மா, இலங்கை போன்ற வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பிய தொழிலாளருக்கும் இங்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
நகரின் வளர்ச்சிக்காக துவக்கப்பட்ட இந்த நூற்பாலை அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் லாபகரமாக இயங்காமல் நஷ்டம் ஏற்பட்டு 2003ல் நூற்பாலை மூடப்பட்டது. இதனால் மில்லை நம்பி இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தினர் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
தங்கள் வாழ்க்கைபாட்டுக்காக ராஜபாளையம் பகுதியில் உள்ள ஸ்பின்னிங் மில்களுக்கும், சிவகாசி பகுதி பட்டாசு ஆலைகளுக்கும் கூலி தொழிலாளர்களாக சென்றனர். ஏராளமான குடும்பங்கள் திருப்பூர், கோவை, ஈரோடு என இடம் பெயர்ந்தனர்.
இங்கு பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், வேலை இழந்தவர்கள் தற்போது மாதம் ரூபாய் ஆயிரம் மட்டுமே பென்சனாக பெற்று வருகின்றனர். அந்தத் தொகையும் கடந்த பல ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை.
நூற்பாலை மூடப்பட்டதால் அங்குள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள மிஷின்கள் பழுதாகி காட்சி பொருளாகிவிட்டது. தற்போது சில திருட்டு சம்பவங்களும் நடக்கிறது. பசுமைச் சோலையாய் விளங்கிய நூற்பாலை வளாகம், தற்போது கருவேல மரங்கள் முளைத்து களை இழந்து காணப்படுகிறது.
சட்டசபை, பாராளுமன்ற தேர்தலின் போது போட்டியிடும் வேட்பாளர்கள் நூற்பாலையை திறப்பதாக தேர்தல் வாக்குறுதி அளிக்கின்றனர்.
ஆனால், அதன் பின்பு யாரும் கண்டு கொள்வதில்லை. இதனால் கூட்டுறவு மில் வளாகம் நாளுக்கு நாள்களை இழந்து வருகிறது.
எனவே, இந்த மில்லினை மீண்டும் முழு அளவில் செயல்பாட்டிற்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஸ்ரீவில்லிபுத்தூர் மக்களின் எதிர்பார்ப்பாகும்.
தீர்வு:நகரில் தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில் மூடி கிடக்கும் நூற்பாலையை மீண்டும் திறக்க மாவட்ட நிர்வாகமும், மக்கள் பிரதிநிதிகளும், அமைச்சர்களும் தனிக் கவனம் செலுத்தி, தொடர் நடவடிக்கை எடுத்து மில்லை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

