/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வளரும் வத்திராயிருப்பு; வளராத பஸ் வசதி
/
வளரும் வத்திராயிருப்பு; வளராத பஸ் வசதி
ADDED : பிப் 20, 2024 12:23 AM
வத்திராயிருப்பு- வத்திராயிருப்பு தாலுகாவின் பல்வேறு கிராமங்களில் வசிக்கும் மக்களின் போக்குவரத்து வசதிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தேனி, மதுரை, சிவகாசி உட்பட பல்வேறு நகரங்களுக்கு போதிய அளவில் நேரடி பஸ் வசதிகள் இல்லாமல் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
வத்திராயிருப்பு தாலுகாவில் ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் தங்கள் தொழில், கல்வி, வேலை வாய்ப்பு,வியாபாரம், மருத்துவம் போன்ற சூழலுக்காக தேனி, மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் போன்ற நகரங்களுக்கு பயணித்து வருகின்றனர்.
ஆனால், அவர்கள் பயணிக்க வசதியாக போதுமான அளவிற்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.
தற்போது வத்திராயிருப்பு டிப்போவில் 6 புறநகர் பஸ்கள் இருக்கும் நிலையில், காலையில் தேனிக்கு செல்லும் பஸ் அங்கிருந்து செங்கோட்டை சென்று மீண்டும் வத்திராயிருப்பிற்கு திரும்புகிறது. இதனால் தேனியில் இருந்து வத்திராயிருப்பு திரும்புவதற்கு பஸ் இல்லாமல் தவிக்கின்றனர்.
இதேபோல் தான் மதுரைக்கு செல்லும் பஸ்கள், அங்கிருந்து தென்காசி சென்று மீண்டும் வத்திராயிருப்பு திரும்புகிறது. இதனால் மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து வத்திராயிருப்புக்கு போதிய அளவிற்கு பஸ்கள் இல்லாமல் வியாபாரிகள் சிரமப்படுகின்றனர்.
இதனை வத்திராயிருப்பு- -தேனி எனவும், வத்திராயிருப்பு- மதுரை எனவும் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை இயங்கும் வகையில் டிரிப்புகளை மாற்றி அமைக்க வேண்டும்.
மேலும், வத்திராயிருப்பிலிருந்து கிருஷ்ணன் கோயில் பாட்டக்குளம், மல்லி வழியாக தினமும் 5 முறை சிவகாசிக்கு இயங்கும் வகையிலும், வத்திராயிருப்பிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வரை இயங்கும் டவுன் பஸ்களில் இரண்டினை ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் வரை இயக்கவும் போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதன் மூலம் வத்திராயிருப்பு பகுதி மக்கள் நேரடி பஸ் வசதி பெரும் சூழல் உருவாகும். இதற்கு அரசு போக்குவரத்து கழக நிர்வாகமும், மக்கள் பிரதிநிதிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

