/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துார் நான்கு வழிச்சாலையில் லாரி முனையம் அமைக்க எதிர்பார்ப்பு
/
சாத்துார் நான்கு வழிச்சாலையில் லாரி முனையம் அமைக்க எதிர்பார்ப்பு
சாத்துார் நான்கு வழிச்சாலையில் லாரி முனையம் அமைக்க எதிர்பார்ப்பு
சாத்துார் நான்கு வழிச்சாலையில் லாரி முனையம் அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : டிச 13, 2025 05:57 AM
சாத்துார்: சாத்துார் நான்கு வழிச் சாலையில் லாரிகள் அதிகம் சென்று வரும் நிலையில் இங்கு லாரி முனையம் அமைக்க வேண்டும் என லாரி ஓட்டுனர்கள் எதிர் பார்க்கின்றனர்.
சாத்துார் அருகே ஆர்.ஆர். நகரிலும், உப்பத்துாரிலும் தனியார் சிமென்ட் தொழிற் சாலைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் ஆலங்குளத்திலும் அரசு சிமென்ட் ஆலை செயல்பட்டு வருகிறது.
சாத்துார் - கோவில்பட்டி நான்கு வழிச்சாலை அருகில் சின்னத்தம்பியா புரம் சின்ன ஓடைப்பட்டி ஆகிய கிராமங்களில் ஜல்லி ஆலைகளும் செயல்பட்டு வருகிறது. நள்ளி, பெத்து ரெட்டி பட்டி, பெரிய ஓடைப்பட்டி கிராமங்களில் அட்டைகள் கம்பெனிகளும் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன.
இதனால் சாத்துார் - கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் அதிக அளவில் லாரிகள் போக்குவரத்து உள்ளது.
மேலும் நீண்ட தொலைவில் இருந்து காற்றாலைகளும் நான்கு வழிச்சாலை வழியாக துாத்துக்குடி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப் படுகிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கும் எரி பொருட்கள் கொண்டு செல்லப்படும் நிலையில் நான்கு வழிச்சாலையில் ஓரத்தில் லாரி டிரைவர்கள் அசதியில் அடிக்கடி ஓய்வு எடுப்பதற்காக லாரிகளை நிறுத்திவிட்டு தூங்குகின்றனர்.
எட்டூர் வட்டம் டோல்கேட்பகுதியில் லாரிகள் நிறுத்துவதற்காக போதுமான இடவசதி இல்லாத நிலையில் பெத்து ரெட்டி பட்டி, என்.சுப்பையா புரம்,என். வெங்கடேஸ்வரபுரம், சடையம்பட்டி சாய்பாபா கோயில் பகுதி களில் உள்ள சர்வீஸ் ரோட்டிலும் நான்கு வழிச்சாலை ரோட்டின் ஓரத்திலும் பலர் லாரியை நிறுத்திவிட்டு ஓய்வு எடுக்கின்றனர்.
இவ்வாறு ஓய் வெடுக்கும் லாரிகள் பின்னால் அதிவேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள், லோடு ஆட்டோக்கள், கார்கள், வேன்கள் போன்றவை மோதி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. உயிர்கள் பலியாகும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சாத்துார்-கோவில்பட்டி நான்கு வழிச்சாலையின் இருபுறமும் சமதளத் திலான நிலங்கள் அதிக அளவில் உள்ளன. தனியார் மற்றும் அரசுக்கு சொந்தமான இடத்தை தேர்வு செய்து டோல்கேட் நிர்வாகம் லாரி முனையம் அமைப்பதன் மூலம் லாரி ஓட்டுநர்கள் இளைப் பாறுவதற்கு வசதியாக இருக்கும்.
மேலும் சாலைஓரத்தில் லாரிகள் நிறுத்தப்படுவதால் ஏற்படும் விபத்துகளும் பெருமளவு குறையும் விலைமதிப்பில்லாத மனித உயிர்களையும் காப் பாற்றலாம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என லாரி ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

