/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வெயில் நேரத்தில் சீரான குடிநீர் சப்ளை எதிர்பார்ப்பு; வீணாவதை தடுத்தால் தீரும் பிரச்னை
/
வெயில் நேரத்தில் சீரான குடிநீர் சப்ளை எதிர்பார்ப்பு; வீணாவதை தடுத்தால் தீரும் பிரச்னை
வெயில் நேரத்தில் சீரான குடிநீர் சப்ளை எதிர்பார்ப்பு; வீணாவதை தடுத்தால் தீரும் பிரச்னை
வெயில் நேரத்தில் சீரான குடிநீர் சப்ளை எதிர்பார்ப்பு; வீணாவதை தடுத்தால் தீரும் பிரச்னை
ADDED : பிப் 26, 2024 01:06 AM
சராசரியாக ஒரு ஆணுக்கு தினமும் 3 லி., பெண்ணுக்கு 2.5 லி., கர்ப்பிணிக்கு 3 லி., குடிநீர் தேவைப்படுகிறது. இதர தேவைகளுக்கு ஒவ்வொரு தனி நபருக்கும் 15 லி., தண்ணீர் தேவைப்படுகிறது. கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தால், இந்த அளவு குடிநீர் தேவை அதிகரிக்கிறது.
மாவட்டத்தில் கோடை நேரங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வேறு இடங்களுக்குச் சென்று குடிநீர் எடுக்க வேண்டிய நிலை உள்ளது. பல இடங்களில் குடிநீர் கேட்டு போராட்டங்களும் நடக்கும்.
மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தாமரபரணி, வைகை கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. வெளியூர் நீர் ஆதாரங்களை நம்பி இருப்பதன் மூலம் பல்வேறு இடர்பாடுகளால், பிரச்னைகளால் இவைகளில் தடங்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. அது மட்டுமல்ல அடிக்கடி குழாய் சேதம் ஏற்பட்டு குடிநீர் வீணாவது வாடிக்கையாக உள்ளது.
கோடை நேரத்திலும் இது நீடிப்பதால் சிக்கல் ஏற்படும். இந்த ஆண்டும் குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் பட்சத்தில் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. பழுதை கண்டறிந்து உடனுக்குடன் சீரமைப்பதன் மூலம் வீணாகும் தண்ணீரை தடுத்து பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
பெரும்பாலான இடங்களில் உள்ளாட்சி நிர்வாகங்கள் தண்ணீர் வீணாவதை கண்டு கொள்ளாமல் நாள் கணக்கில் கிடப்பில் போட்டு விடுவர். உரிய நேரத்திற்கு மராமத்து பணிகளை செய்வது கிடையாது. கோடை வெயில் வாட்டி வதைத்து வருவதால் குடிநீர் தேவை அதிகரிக்கும் சூழ்நிலை உள்ளது.
உள்ளூரில் உள்ள தரைதள தொட்டிகள், மேல்நிலைத் தொட்டிகள் சேதமடைந்தும் குடிநீர் வீணாகின்றன. பெரும்பாலான ஊர்களில் மேல்நிலைத் தொட்டிகள் சேதமடைந்து குடிநீர் கசிவு ஏற்பட்டு வீணாகி வருகிறது.
இவற்றையும் உரிய நேரத்தில் மராமத்து செய்தும் வீணாவதை தடுக்க வேண்டும். கோடை காலத்தில் அனைவருக்கும் சீராக குடிநீர் சப்ளை செய்வதை உள்ளாட்சி நிர்வாகங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

