/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டா மாறுதல் விண்ணப்பங்களுக்கு 3 நாட்களுக்குள் தீர்வு காண நெருக்கடி வி.ஏ.ஓ.,க்கள் திணறல்
/
பட்டா மாறுதல் விண்ணப்பங்களுக்கு 3 நாட்களுக்குள் தீர்வு காண நெருக்கடி வி.ஏ.ஓ.,க்கள் திணறல்
பட்டா மாறுதல் விண்ணப்பங்களுக்கு 3 நாட்களுக்குள் தீர்வு காண நெருக்கடி வி.ஏ.ஓ.,க்கள் திணறல்
பட்டா மாறுதல் விண்ணப்பங்களுக்கு 3 நாட்களுக்குள் தீர்வு காண நெருக்கடி வி.ஏ.ஓ.,க்கள் திணறல்
ADDED : டிச 11, 2024 04:54 AM
ராஜபாளையம் : பட்டா மாறுதல் தொடர்பான விண்ணப்பங்களை 3 நாட்களுக்குள் பரிசீலித்து ஒப்புதல் வழங்க வேண்டும் என அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதால் வி.ஏ.ஓ., க்கள் திணறி வருகின்றனர்.
தமிழக முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் 17,860 வருவாய் கிராமங்கள் உள்ளன. வி.ஏ.ஓ.,க்கள் கிராம கணக்குகள் பராமரிப்பு, பிறப்பு இறப்பு பதிவு, நிலவரி வசூல், பயிர் கணக்கீடு, நில ஆவணங்கள் பராமரிப்பு, இயற்கை பேரிடர் கொடுத்த அறிக்கைகளை தயாரிப்பது, அரசு புறம்போக்கு நிலங்களை பாதுகாத்தல், கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பட்டா மாறுதல் மனுக்களை மூன்று நாட்களுக்குள் பரிசீலித்து ஒப்புதல் வழங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மனுக்களை நிலுவையில் வைத்தாலோ அதிக மனுக்களை தள்ளுபடி செய்தாலோ அதிகாரிகள் தரப்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படுவதால் வி.ஏ.ஓ.,க்கள் வழக்கமான பணிகளை செய்ய முடியாமல் தள்ளாடுகின்றனர்.
இதுகுறித்து வி.ஏ.ஓ., சங்க நிர்வாகிகள் கூறுகையில்: பத்திரப்பதிவுத்துறை, வருவாய் துறை இணைந்து புதிதாக பத்திரம் பதிவு செய்தவர்களுக்கு இ-பட்டா முறையை கடந்த ஜூன் மாதம் அரசு அறிமுகப்படுத்தியது. தனி பட்டாவில் உள்ள சொத்தை முழுமையாக வாங்குபவர்களுக்கு மட்டுமே தானியங்கி முறையில் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. கூட்டு பட்டா அல்லது நிலத்தின் ஒரு பகுதி வாங்கும் போது இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்து வருவாய்த்துறை ஆய்வு செய்தபின் பட்டா வழங்கப்படுகிறது.
இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கும் பட்டா பெயர் மாற்றம் தொடர்பான மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் ஆய்வு செய்து ஒப்பந்தம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பத்திரப்பதிவு அலுவலகம் மூலம் வரும் கோரிக்கைகளுக்கு மூன்று நாட்களுக்குள் ஆய்வு செய்து ஒப்புதல் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் நிலுவையில் வைத்தாலோ குறைகளை சுட்டிக்காட்டி தள்ளுபடி செய்தாலோ முறையாக பணி செய்யவில்லை என கூறி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்புகின்றனர்.
பத்திரப்பதிவின் அடிப்படையில் கூட்டு பட்டாவில் வாங்கியவரின் பெயரை இணைத்தால் மோசடி என போலீசில் புகார் அளிக்கின்றனர். இதனால் பிற பணிகளை மேற்கொள்ள முடியாமல் வி.ஏ.ஓ.,க்கள் திணறி வருகிறோம், என்றனர்.

