/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
2 ஆண்டுகளாக கிடப்பில் பாலப்பணிகள்; அறிவிப்பு பலகை இல்லாததால் அதிகரிக்கும் விபத்து
/
2 ஆண்டுகளாக கிடப்பில் பாலப்பணிகள்; அறிவிப்பு பலகை இல்லாததால் அதிகரிக்கும் விபத்து
2 ஆண்டுகளாக கிடப்பில் பாலப்பணிகள்; அறிவிப்பு பலகை இல்லாததால் அதிகரிக்கும் விபத்து
2 ஆண்டுகளாக கிடப்பில் பாலப்பணிகள்; அறிவிப்பு பலகை இல்லாததால் அதிகரிக்கும் விபத்து
ADDED : பிப் 04, 2024 11:49 PM

நரிக்குடி : பழையனுார் அ.முக்குளம் ரோட்டில் நரிக்குடி எழுவணியில் உள்ள ஓடையில் பாலம் கட்ட பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெறாமல் 2 ஆண்டுகளாக கிடப்பில் போட்டனர். அடிக்கடி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். உயிரிழப்பு ஏற்படும் முன் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
சிவகங்கை மாவட்டம் பழையனுாரில் இருந்து ஓடாத்துார் வழியாக விருதுநகர் மாவட்டம் எழுவணி, அ.முக்குளம் வரை 10 கி.மீ., துாரம் ரோடு உள்ளது. இந்த வழித்தடத்தில் 2 அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன.
அப்பகுதி மக்கள் சிவகங்கை, விருதுநகர், மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு எளிதில் சென்று வர முடிந்தது. இந்நிலையில் ரோடு படு மோசமானதால் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், வெளியூர் வேலைக்கு செல்பவர்கள் என பலரும் பல கி.மீ., தூரம் நடந்து பஸ் பிடித்து சென்று வருகின்றனர். பல்வேறு கோரிக்கைகளுக்கு பின் ரோடு சீரமைக்கப்பட்டது.
இந்த ரோட்டின் குறுக்கே நரிக்குடி எழுவணி கண்மாய்க்கு செல்லும் நீர் வரத்து ஓடை உள்ளது. 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் இங்கு புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு முன் ஓடையில் பள்ளம் தோண்டினர். போதிய நிதி இல்லாததால் பாலம் கட்டும் பணியை தொடர முடியவில்லை. கிடப்பில் போட்டனர். வாகன போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. பாலத்திற்காக பள்ளம் தோண்டிய இடத்தில் அறிவிப்பு பலகையோ, தடுப்போ வைக்க வில்லை.
வேகமாக வரும் வாகன ஓட்டிகள் பலர் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். நேற்று முன் தினம் இரவு அந்த வழியாக வந்த கார் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து, விபத்துக்குள்ளானது. பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடிக்கடி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருவதால் விரைந்து பாலம் கட்ட நிதி ஒதுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் மாவட்டத்தின் கடைப்பகுதியில் இருப்பதால் அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை என மக்கள் புகார் தெரிவித்தனர். உயிரிழப்பிற்கு முன் நடவடிக்கை எடுக்கப்படுமா என எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

