/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தீப்பெட்டிக்கழிவால் பாழாகும் விவசாயம்; குறைதீர் கூட்டத்தில் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு
/
தீப்பெட்டிக்கழிவால் பாழாகும் விவசாயம்; குறைதீர் கூட்டத்தில் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு
தீப்பெட்டிக்கழிவால் பாழாகும் விவசாயம்; குறைதீர் கூட்டத்தில் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு
தீப்பெட்டிக்கழிவால் பாழாகும் விவசாயம்; குறைதீர் கூட்டத்தில் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு
ADDED : நவ 23, 2024 06:18 AM

விருதுநகர்; விருதுநகரில் நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில் வண்டிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி விவசாயிகள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து தீப்பெட்டி கழிவால் விவசாயம் பாதிக்கப்படுவதாக புகார் அளித்தனர்.
விருதுநகரில் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் குறைதீர் கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். வேளாண் இணை இயக்குனர் விஜயா, தோட்டக்கலை துணை இயக்குனர் சுபா வாசுகி, நேர்முக உதவியாளர் விவசாயம் நாச்சியார் அம்மாள், கூட்டுறவு இணைப்பதிவாளர் செந்தில்குமார் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
ஓ.ஏ.நாராயணசாமி, தமிழ்விவசாயிகள் சங்கம்: விருதுநகர் ஆமத்துாரில் வண்டிப்பாதை, இரு நீர்வரத்து ஓடைகளை ஆக்கிரமித்துள்ளனர். வருவாய்த்துறையினர் சர்வே செய்து ஆக்கிரமிப்பு என உறுதி செய்து விட்டனர். இருப்பினும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது விதைப்பு பணிகள் நடந்து வருகிறது. மிகுந்த சிரமத்தை சந்திக்கிறோம்.இதற்கு நடவடிக்கை கோரி தரையில் அமர்ந்து விவசாயிகள் கோஷம் எழுப்பினர். கலெக்டரை ராஜினாமா செய்யக்கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஜெயசீலன், கலெக்டர்: டி.ஆர்.ஓ.,வை வைத்து அளந்து இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும். இதன் பிறகு விவசாயிகள் இருக்கைக்கு சென்றனர்.
ராமச்சந்திர ராஜா, ராஜபாளையம்: தரணி சர்க்கரை ஆலையின் நிலுவை தொகை பிரச்னையில்உச்சநீதிமன்றத்தின் தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்திடம்நிலுவை தொகை தருவதாக ஒப்பு கொண்டுள்ளனர். அதை கொடுக்காமல் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் பெற்று தர வேண்டும். தமிழக அரசு கரும்பு விவசாயிகளுக்கு அறிவித்த சிறப்பு ஊக்கத்தொகையை விரைந்து பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமமூர்த்தி, ஸ்ரீவில்லிபுத்துார்: கொத்தன்குளம் கண்மாயின் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும். ஆக்கிரமிப்பு செய்தோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜபாளையம் ஒன்றியம் துலாக்குடி கண்மாய், கிழவிகுளம் வரத்து கால்வாய்களை துார்வார வேண்டும். இதில் விவசாயிகள் பாதிப்பு ஏற்பட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்.
அம்மையப்பன், ராஜபாளையம்: தேசியமயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளில் பயிர்க்கடன் கொடுப்பதில்லை.
சந்திரசேகர், வெம்பக்கோட்டை: வல்லம்பட்டி பனையடிபட்டி நீர்வரத்து ஓடைகளில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
முத்துமாரி, அருப்புக்கோட்டை: பயிர்க்காப்பீடு 3 ஆண்டுகளாக வழங்காமல் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கர்ணன், ஸ்ரீவில்லிபுத்துார்: படிக்காசு வைத்தான்பட்டியில் காயல்குடி கண்மாயில் நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
அழகர்சாமி, திருத்தங்கல்: கே.சி.சி., கடன் அட்டை எத்தனை வழங்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கும் கடன் அட்டை வழங்க வேண்டும்.
நாச்சியார் அம்மாள், நேர்முக உதவியாளர்: 79,373 கே.சி.சி., கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆனந்த், விருதுநகர்: மானியத்தில் சோலார் பேனல்கள் அமைக்க வேண்டும்.
பாலகணேசன், மம்சா புரம்: சிவந்திபட்டி டிரான்ஸ்பார்மர்களில் இருந்து செல்லும் மின் ஒயர்கள் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளன. இவற்றை மாற்றிக் கொடுக்க வேண்டும்.
முருகன், கான்சாபுரம்: எங்கள் ஊராட்சியில் வரப்பு கட்ட மனு அளித்தேன். என் அனுமதியின்றி என் ஆவணங்களை பயன்படுத்தி முறைகேடு செய்தது தெரிய வருகிறது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயசீலன், கலெக்டர்: இது குறித்து ஊராட்சிகள் உதவி இயக்குனர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
கணேசன், சிவகாசி: ஆனைக்குட்டம் பாசன ஆயக்கட்டு பரப்பில் வாடியூர் கிராமத்தின் 300 ஏக்கர் விவசாய நிலங்களை சேர்க்க வேண்டும்.
மணிகண்டபிரபு: சிவகாசி காக்கிவாடன்பட்டியில் தீப்பெட்டி ஆலையின் மருந்து கழிவுகள் கசிந்து கிணறு நாாற்றம் வீசுகிறது. அதை பயன்படுத்தும் போது தோல் அரிக்கிறது. விவசாயத்திற்கு பயன்படுத்த முடியவில்லை.
ஞானகுரு, மம்சாபுரம்: ஸ்ரீவில்லிபுத்துார் மம்சாபுரம் சிவந்திட்டி, வாழைக்குளம் கிராமங்களில் அதிகப்படியான நெல் விவசாயம் நடந்து வருகிறது. இங்கு அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். தாசில்தார் ஆய்வு செய்து அரசு புறம்போக்கு நிலத்தை தேர்வு செய்து விட்ட நிலையிலும், தற்போது வரை கொள்முதல் நிலையம் அமைக்கப்படாமல் உள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.

