/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நிலத்தடி நீருக்கு வேட்டு வைக்கும் கழிவுநீர்; திறந்தவெளி கழிப்பறை விருதுநகர் அய்யனார் நகர் குடியிருப்போர் அல்லல்
/
நிலத்தடி நீருக்கு வேட்டு வைக்கும் கழிவுநீர்; திறந்தவெளி கழிப்பறை விருதுநகர் அய்யனார் நகர் குடியிருப்போர் அல்லல்
நிலத்தடி நீருக்கு வேட்டு வைக்கும் கழிவுநீர்; திறந்தவெளி கழிப்பறை விருதுநகர் அய்யனார் நகர் குடியிருப்போர் அல்லல்
நிலத்தடி நீருக்கு வேட்டு வைக்கும் கழிவுநீர்; திறந்தவெளி கழிப்பறை விருதுநகர் அய்யனார் நகர் குடியிருப்போர் அல்லல்
ADDED : மே 22, 2024 07:42 AM

விருதுநகர்: விருதுநகர் அய்யனார் நகரில் கழிவுநீரானது நேரடியாக கவுசிகா நதியில் கலப்பதால் நிலத்தடி நீர் தரமற்றதாக மாறி வருகிறது. சுகாதார வளாகங்களே இல்லாததால் மக்கள் திறந்தவெளியை நாடுகின்றனர். மழை நேரங்களில் வழுக்கி விழுந்து காயமடைகின்றனர்.
விருதுநகர் அருகே அய்யனார் நகர் குடியிருப்போர் கருப்பாயி, முனியம்மாள், அய்யனார், சரவணன் ஆகியோர் கூறியதாவது: விருதுநகர் பாவாலி ஊராட்சியில் அய்யனார் நகர் உள்ளது. இதன் அருகே கவுசிகா நதி ஓடுகிறது.
2005 முதல் கவுசிகா நதியில் நீரோட்டம் நின்று விட அதன் பிறகு மழைக்காலங்களில் மட்டுமே தண்ணீர் வரும். கடந்த ஆண்டு கூட பெய்த வடகிழக்கு பருவமழையின் போது ஒரு வாரம் மட்டுமே ஆற்றில் நீரோட்டம் இருந்தது. பின் வெள்ளநீர் போல வந்து வடிந்து மாயமாகி விட்டது.
இந்நிலையில் அய்யனார் நகர் பகுதியில் நிலத்தடி நீர் குறைவதால் இப்பகுதிக்கு வரும் கவுசிகா நதி அருகே தடுப்பணை கட்ட கோரிக்கையை 2014 முதல் வைத்து வருகிறோம். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. நீர்வள ஆதாரத்துறையும் கண்டுக்கவில்லை. இதனால் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறோம். மேலும் உள்ளாட்சி நிர்வாகங்கள் குடியிருப்புகளின் கழிவுநீரை சுத்திகரிக்காமல் நேரடியாக ஆற்றில் கலக்க செய்கின்றன. இதனால் எங்கள் குடியிருப்பு பகுதியில் நிலத்தடிநீர் பாதித்து தரமற்றதாக மாறி உள்ளது. இந்த நீரை குடித்தால் நோய் தொற்று அபாயம் ஏற்படும் சூழல் உள்ளது.
நேரடியாக குடியிருப்புகளின் கழிவுநீர் கலப்பதை தடுத்து 5 அடி உயரத்தில் அய்யனார் நகரை ஒட்டி தடுப்பணை அமைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே இப்பகுதியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க முடியும். இங்கு 10 லட்சம் லிட்டர் குடிநீர் தொட்டி உள்ளது. மக்கள் தொகை பெருகி உள்ள நிலையில் அதை விரிவுப்படுத்த வேண்டும். ஊராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட மினரல் குடிநீர் பிளான்ட் செயல்படாமலே உள்ளது.
போலீஸ் பாலம் அருகே செல்லும் நீர்வள ஆதாரத்துறையின் ஓடை கோரைப்புற்கள், கருவலே மரங்களால் புதர்மண்டி உள்ளது. இதனால் கனமழை பெய்தால் மழைநீரானது நேரடியாக குடியிருப்புகளில் தங்குகிறது. அவை வடியாமல் மாதக்கணக்கில் தேங்கி கொசுத்தொல்லையை ஏற்படுத்துகிறது. மேலும் கழிவுநீரும் கலந்து வருவதால் நோய் அபாயமும் ஏற்படுகிறது.
அதே போல் சுகாதார வளாகங்கள் எதுவும் இல்லாததால் மக்கள் திறந்தவெளியை நாடுகின்றனர். பெண்கள் சிரமப்படுகின்றனர். மழை நேரங்களில் வழுக்கி விழுந்து காயமடைகின்றனர். சுகாதார வளாகங்களை விரைந்து கட்டி தர வேண்டும். எங்கள் பகுதி நகராட்சியை ஒட்டி அமைந்துள்ளது. குடியிருப்புகள் பெருகிவிட்ட நிலையில் ஊராட்சியில் இருந்து பிரித்து நகராட்சியில் எங்கள் பகுதியை இணைக்க வேண்டும், என்றார்.

