ஸ்ரீவில்லிபுத்துார், : ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் வந்து செல்லும் நுழைவுப் பகுதியில் திட்ட பணிகள் தாமதமாக நடப்பதால் ஸ்டேஷனுக்கு வரும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
ஆண்டாள் கோயில், சதுரகிரி சுந்தர மகாலிங்கம்கோயில், செண்பகத்தோப்பு காட்டழகர் கோயில், பெரிய மாரியம்மன் கோயில்கள் உள்ள ஆன்மிக நகரான ஸ்ரீவில்லிபுத்தூருக்கு விருதுநகர் மாவட்ட மக்கள் மட்டுமின்றி சென்னை, கோவை, பெங்களூரூ, நாகர்கோவில், கொல்லம் போன்ற வெளியூர்களை சேர்ந்த ஏராளமான மக்கள்தினமும் ரயில் வந்து செல்கின்றனர்.
தற்போது மயிலாடுதுறை கொல்லம், திருவனந்தபுரம் போன்ற நகரங்களுக்கும் நேரடி ரயில் வசதி உள்ளதால் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
2020க்கு முன்பு வரை ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே ஸ்டேஷனில் பிளாட்பார்ம்கள் போதிய உயரம் இன்றி தாழ்வாகவும், நடை மேம்பாலம் இல்லாமலும் போதிய நிழற்குடை இல்லாமல் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் பிளாட்பார்ம்கள் உயர்த்திக்கட்டும் பணி துவங்கி, மிகவும் காலதாமதத்துடன் முடிந்தது.
இந்நிலையில் மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே ஸ்டேஷன் தேர்வு செய்யப்பட்டு பல லட்சம் ரூபாய் செலவில் நடை மேம்பாலம் அமைத்தல், இருக்கை வசதிகள், குடிநீர், மின்விளக்குகள், டிஜிட்டல் கோச் பொசிஷன் போர்டுகள், லிப்ட் வசதி, டூ வீலர் பார்க்கிங், கார் பார்க்கிங், பூங்கா ஆகிய வளர்ச்சி திட்ட பணிகள் செய்ய திட்டமிடப்பட்டது.
இதில் நடை மேம்பாலம் அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது லிப்ட் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. டிஜிட்டல் போர்டுகள் பொருத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்டேஷன் முன்புறத்தில் ரோடுகள் விரிவாக்கம் செய்யப்பட்டு முகப்பு தோற்றம் புதுப்பொலிவுடன் மாற்றி அமைக்க மாதிரி வடிவமைப்பை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டு இருந்தது.
அதன்படி தற்போது முகப்பு பகுதியில் வாகனங்கள் நிறுத்துமிடம் தோண்டப்பட்டும், போர்டிகோ இடிக்கப்பட்டும், கார் மற்றும் டூவீலர் பார்க்கிங் போன்ற பணிகள் மந்தநிலையில் நடந்து வருகிறது.
இதனால் ஸ்டேஷனுக்குவரும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களிலும், மழை நேரத்திலும் எளிதில் வந்து செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.
இதில் ஸ்டேஷன் நுழைவு பகுதியில் ஆர்ச் அமைக்கும் பணிக்காக சாரம் அமைக்கப்பட்டுள்ளதால் கார், ஆட்டோவில் வரும் ரயில் பயணிகள் சிவகாசி ரோடு நீதிமன்றம் வழியாக ஸ்டேஷனுக்கு வர வேண்டி உள்ளது.
கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் ஸ்டேஷன் முன்பகுதியில் சகதி ஏற்பட்டு பயணிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, காலதாமதம் இன்றி அம்ரித் பாரத் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென ஸ்ரீவில்லிபுத்தூர் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
பணிகளில் வேண்டும் விரைவு
-முனியப்பன், ரயில் பயணிகள் சங்க நிர்வாகி:பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாத ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் செய்வது வரவேற்கத்தக்கது. தற்போது ஸ்டேஷன் முகப்பு பகுதியில் மந்தமாக நடக்கும் பணியால், முதியவர்கள்,கர்ப்பிணி பெண்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே, வளர்ச்சி பணிகளை கால தாமதமின்றி விரைந்து சீரமைக்க வேண்டும்.
முதியவர்கள் சிரமம்
சுப்பிரமணியன், எழுத்தாளர் சங்க நிர்வாகி: தற்போது மயிலாடுதுறை, குருவாயூர், திருவனந்தபுரம் போன்ற நகரங்களுக்கு ரயில்கள் இயங்குவதால் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியுள்ளது.
இதற்காக டூ வீலர், கார், ஆட்டோக்களில் மக்கள் வந்து செல்லும் நிலையில் ஸ்டேஷன் முகப்பு பகுதியில் ரோடுகள் தோண்டி போடப்பட்டுள்ளதால் முதியவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, முன்னுரிமை கொடுத்து முகப்பு பகுதி பணிகளை விரைந்து சீரமைக்க வேண்டும்.
தீர்வுகள்
ரயில்வே ஸ்டேஷன்நுழைவுப் பகுதியில் நடக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நவீன சுகாதார வளாகத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். நீதிமன்றத்தில் இருந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் ரோட்டினை முழு அளவில் அகலப்படுத்த வேண்டும்.

