/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குடியிருப்புகளுக்குள் திரிந்த பன்றிகள்
/
குடியிருப்புகளுக்குள் திரிந்த பன்றிகள்
ADDED : ஏப் 30, 2024 12:11 AM

காரியாபட்டி : காரியாபட்டி குடியிருப்பு பகுதிகளுக்குள் பன்றிகள் சுற்றித் திரிவதால் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதுடன், ரோட்டின் குறுக்கும் நெடுக்குமாக கடந்து செல்வதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
காரியாபட்டி பகுதியில் அதிக அளவில் பன்றிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் வளர்க்க வேண்டும் என்பது விதி. இதனை கண்டு கொள்ளாமல், பெரும்பாலானவர்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வளர்த்து வருகின்றனர். அதனை ஒரே இடத்தில் அடைத்து வைத்து வளர்ப்பதும் கிடையாது.
சுதந்திரமாக விட்டு விடுவதால் இறை தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றி திரிகின்றன. சாக்கடையில் புரண்டு சகதியுடன் வீதிகளில் உலா வருகின்றன. சகதியை சிதறிவிட்டுச் செல்வதால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
கூட்டமாகவும், அணிவகுத்தும் ரோட்டை கடந்து செல்கின்றன. அதிவேகமாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். பன்றிகளை கண்டதும் நாய்கள் விரட்டி சண்டை இடுகின்றன. அருவருப்பான சத்தத்தால் சிறுவர்கள் பயப்படுவதுடன், அலறி ஓடுகின்றனர். சாக்கடை கழிவுகளுடன்சுற்றித் திரியும் பன்றிகளை காண அருவருப்பாக இருப்பதால் முகம் சுளிக்கின்றனர்.
வீடுகள் அருகில் உள்ள கழிவு நீரில் புரண்டு துர்நாற்றத்தை கிளப்புகிறது. பல்வேறு பிரச்னைகளுக்கு காரணமாக இருக்கும் பன்றிகளை ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் வளர்க்க அறிவுறுத்த வேண்டும். மீறி வளர்ப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

